1761. வானங் கொடுப்பீர் திருவொற்றி
வாழ்வீ ரன்று வந்தீரென்
மானங் கெடுத்தீ ரென்றேன்முன்
வனத்தார் விடுத்தா ரென்றார்நீர்
ஊனந் தடுக்கு மிறையென்றே
னுலவா தடுக்கு மென்றார்மால்
ஏனம் புடைத்தீ ரணையென்பீ
ரென்றே னகலா ரென்றாரே.
உரை: புண்ணியம் செய்தவர்க்கு வானுலக வாழ்வு தருபவராய்த் திருவெற்றியூரில் உள்ள தேவரே, அன்றொரு நாள் எழுந்தருளி எனது மானத்தைப் போக்கினீர் என்று சொன்னேனாக, அதனை முன்பு தாருக வனத்து முனிவர் விடுத்தனர் என்று உரைத்தார்; நீர் ஊனத்தைப் போக்கும் இறைவராவீர் என்றேன்; நீங்காது வந்து சேரும் என்று கூறினார்; திருமாலாகிய பன்றியை ஒடுக்கின நீர் எனது அருகு வந்து அணைக என்று சொல்லுமின் என்றேனாக, அகன்ற உலகோர் உளர் காண் என வுரைத்தார். எ.று.
நல்வினை செய்தவர்க்கு இந்திரன் உறையும் தேவருலகப் போக வாழ்வு தரப்படுவது பற்றி, “வானம் கொடுப்பீர்” என்று புகழ்கின்றாள். மானம் - பெருமை. வேட்கை தோற்றுவித்து அயல் மகளிர் கண்டு ஐயுறுமாறு மேனி வேறுபடச் செய்தீர் என்பாளாய், “மானங் கெடுத்தீர்” என்று கூறுகிறாள். அதனை மான் அங்கு எடுத்தீர் என்றதாகக் கொண்டு, அந்த மான் தாருக வனத்து முனிவர் விடுத்தது என்பாராய், “வனத்தார் விடுத்தார்” என்று தேவர் உரைக்கின்றார். ஊனம் - மலப்பிணிப்பால் உளதாகும் குற்றம்; பிறப்புமாம். மலத் தொடர்பு வீடு பெறுங்காறும் விடாது உயிரைத் தொடரும் என்பாராய், “உலவாது அடுக்கும்” என்று சொல்லுகிறார். மால் ஏனம்; திருமால் பன்றிப் பிறப்பெடுத்த செய்தியைக் குறிக்கிறது. அகலார் - அகன்ற உலகத்தோர் உளர்; அவர் இகழ்வார் என்ற கருத்துத் தோன்ற, “அகலார்” என்று கூறுகிறார். இதுவும் சில வேறுபாட்டுடன் இங்கித மாலையிற் (1850-1) காணப்படுகிறுது. (3)
|