1762. இருமை யளவும் பொழிலொற்றி
யிடத்தீர் முனிவ ரிடரறநீர்
பெருமை நடத்தீ ரென்றேனென்
பிள்ளை நடத்தி னானென்றார்
தரும மலவிவ் விடையென்றேன்
றரும விடையு முண்டென்றார்
கரும மெவன்யான் செயவென்றேன்
கருதாண் பாலன் றென்றாரே.
உரை: கரிய மேகங்கள் தவழும் சோலைகளையுடைய திருவொற்றியூராகிய இடத்தை யுடையவரே, முனிபுங்கவர் இருவர் வருத்தம் நீங்கும் பொருட்டுப் பெரிய நடனத்தை யுடையரானீர் என்று நான் சொன்னேனாக, தேவர், அதுகேட்டு என் பிள்ளை நடத்தினான் என மொழிந்தார்; நீர் தரும் விடை உமக்குத் தரும மாகாதென்று கூறினேன். என்னிடம் தரும விடையும் உண்டு என்று சொன்னார்; நான் இனிச் செயற்குரிய கருமம் யாதாம் என்றேன்; கருமம் செய நீ ஆண்பாலன்று என வுரைக்கின்றார். எ.று.
இருமை - கரிய மேகம். முனிவர் - வியாக்கிரபாதர், பதஞ்சலி என்ற இருவர். படைத்தல் முதலிய ஐந்து தொழிலும் நடைபெறுதலால் “பெருமை நடம்” என்று இயம்புகிறாள். முனிவர் இடர் அற என்றதற்கு நாரத முனிவரால் உண்டாகிய இடர் என்று கொண்டு, அவர் விடுத்த ஆட்டுக் கிடாவை முருகப் பெருமான் இவர்ந்து செலுத்தி, அதனால் விளைந்த தீது போக்கிய வரலாற்றை இங்கே குறிப்பாராய் “என் பிள்ளை நடத்தினான்” என உரைக்கின்றார். நேர் விடை என்றற்குத் “தருமமல இவ்விடை” என்கின்றாள். தருமத்தை எருதாகக் கொண்டு இவன் ஏகின்றான் என்பதனால், “தரும விடையும் உண்டு” என்று சொல்லுகிறார். கருமம் - செத்தார்க்குச் செய்யும் இறுதிச் சடங்கு. இதனை ஆண் மக்களே செய்தல் வேண்டும் என்பவாகலின், “கருது ஆண்பால் அன்று” என மொழிகின்றார். இதுவும் சிறிது வேறுபட்டு இங்கித மாலையிற் (1852) காணப்படுகிறது. (4)
|