பக்கம் எண் :

1763.

     ஒசிய விடுகு மிடையாரை
          யொற்றி யிருந்தே வுருக்குகின்ற
     வசியர் மிகநீ ரென்றேனென்
          மகனே யென்றார் வளர்காமப்
     பசிய துடையே னென்றேனுட்
          பணியல் குலுமப் படியென்றார்
     நிசிய மிடற்றீ ராமென்றேன்
          நீகண் டதுவே யென்றாரே.

உரை:

      தளர்வுறச் சிறுகும் இடையையுடைய இளமகளிர் மனத்தைத் திருவொற்றியூர்க்கண் இருந்தே உருக்குகின்ற மிக்க வசியராவீர் என்று பிச்சைத் தேவர்க்குச் சொன்னேனாக, அவர் என் மகனே, நானல்ல என்று கூறினார்; பின்பு நான், உள்ளத்தே வளர்கின்ற காமவேட்கை யுடையவளாவேன் என உரைக்க, உனது ஆடைக்குள் பாம்பு போன்ற அல்குலும் அங்ஙனம் வளர்வது காண் எனக் கூறினார்; அது கேட்டு நிசி போல் இருண்ட கழுத்தை யுடையராவீர் என யான் விளம்ப, அது நீ கண்டது தான் என்றார். எ.று.

     ஒசிதல் - தளர்தல். இடுகுதல் - சிறுத்தல். “இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருத்நீர் எம்பிரானிரே” (முருகன்) என நம்பியாரூரர் பாடுவது காண்க. வசியர் - வசியம் செய்பவர்; மனத்தைக் கவர்பவர். இதனைத் தேவர் வைசியரென்பதன் திரிபாகக் கொண்டு செட்டியென்ற பெயருடையவராதலின் முருகப் பெருமான் மகளிரை வசியம் செய்யும் குமரன் என்பாராய், “என் மகனே” என வுரைக்கின்றார். காம வேட்கையைக் காமப்பசி என்றலு முண்டாதலால், “காமப் பசியதுடையேன்” என நங்கை நவில்கின்றாள். “வளர் காமம்” என்றது கொண்டு, வேட்கை மீதூருங்கால் அல்குலும் வளரும் என்பது கொண்டு, அல்குலும் அப்படி வளர்ந்துளாய் என்பார், “அல்குலும் அப்படி” என வுரைக்கின்றார். பணி - பாம்பு.; ஈண்டுப் பாம்பின் படத்தின் மேற்று. நிசி - இருள்; இது நிசிய மென வந்துளது. உமது பேச்சு குறும்பாக உளது என்பாளாய், “நிசிய மிடற்றீராம்” என்று சொல்லுகிறாள். அது நீ அறிந்தது தானே என்பாராய், “நீ கண்டதுவே” என்கிறார். நீ கண்ட காம வேட்கையும் விடமாம் என்றலுமாம். இதுவும் சில வேறுபாட்டுடன் இங்கித மாலையிற் (1853) காணப்படுகிறது.

     (5)