பக்கம் எண் :

1767.

     வண்மை தருவீ ரொற்றிநின்று
          வருவீ ரென்னை மருவீர்நீர்
     உண்மை யுடையீ ரென்றேனா
          முடைப்பேம் வணங்கி னோர்க்கென்றார்
     கண்மை யுடையீ ரென்றேனீ
          களமை யுடையேம் யாமென்றார்
     தண்மை யருளீ ரென்றேனாந்
          தகையே யருள்வ தென்றாரே.

உரை:

      வளமை தருபவராய்த் திருவொற்றியூரினின்றும் வருகின்ற தேவராகிய நீவிர் உண்மை யுடையவராக இருக்கின்றீர்; என்னைக் கூடுவீராக என்று கேட்டேனாக, என்னை வணங்குவோர் உள்ளத்திற்படியும் கள்ளமாகிய குற்றத்தை உடைத் தெறிவோம் என உரைத்தார்; கண்ணோட்டமாகிய நலத்தை நீவிர் உடையராக இருக்கின்றீர் என்று நான் சொன்னேன்; எனக்கு அவர் யாம் கழுத்தில் கருமை யுடையோம் என்று கூறினார்; என் வேட்கை வெம்மையைப் போக்கி யருள்வீர் என்று வேண்டினேன்; அவர் அழகையே தருவோம் என்று சொன்னார். எ.று.

     உண்மை யுடையீர் என்று நங்கை சொன்னதை உள் மை என்று கொண்டு உள்ளத்திற் கள்ளமாகிய குற்ற முடையீர் எனக் கருதி, அடியார் உள்ளத்திற் படியும் கள்ளமாகிய மையை உடைத் தெறிவோம் என்பாராய், “நாம் உடைப்பேம் வணங்கினோர்க்கு” என்று கூறுகின்றார். கண்மை - கண்ணோட்டமாகிய தன்மை. இதனைக் கண்ணில் மையுடையீர் என்றதாகக் கொண்டு, கண்ணில் அன்று, கழுத்தில் கருமையுடையோம் என்பாராய், “களம் மையுடையேம்” என்று சொல்லுகிறார். தண்மை - தட்பம்; குளிர்ச்சி. தகை - பெண்மைக்குத் தகவு தரும் அழகு. இது சில வேறுபாட்டுடன் இங்கித மாலையிற் (1857) காணப்படுகிறது.

     (9)