பக்கம் எண் :

1769.

     கனிமா னிதழி முலைச்சுவடு
          களித்தீ ரொற்றிக் கடிநகரீர்
     தனிமா னேந்தி யென்றேனென்
          றலைமே லொருமா னேந்தியென்றார்
     துனிமாற் றுகிலீ ரென்றேனற்
          றுகில்கோ வணங்கா ணென்றாரென்
     பனிமால் வரையீ ரென்றேனென்
          பனிமால் வரைகா ணென்றாரே.

உரை:

      கோவைக் கனி போன்ற வாயிதழை யுடைய உமையம்மையின் முலைத் தழும்புபெற்று உவகை யுற்றவராகிய நீவிர் திருவொற்றியூ ரென்னும் காவல் மிக்க நகரத்தையுடைய பிச்சைத் தேவர்; நீர் கையில் ஒரு மானை ஏந்துபவர் என்றேனாக, நான் தலை மேலும் ஒரு மானை ஏந்துபவன் என்று சொன்னார்; இனியும் என் மேலுள்ள துனியை நீக்குகின்றீரில்லை என்று கேட்டேன்; எனது நல்ல துணி கோவணம் காண் என்று உரைத்தார்; எனக்குக் குளிர் நடுக்கம் தரும் வேட்கை மயக்கத்தைப் போக்கினீரில்லை என மொழிந்தேன்; யான் இருக்கும் இடமே பெரிய பனிமலை என அறிக என்று கூறினார். எ.று.

     தாருக வனத்து முனிவர் விடுத்த ஒரு மானைச் சிவன் கையிற் ஏந்துவது பற்றித் “தனிமான் ஏந்தி” என்று நங்கை சொல்லுகிறாள். அவட்கு நான் தனி மான் உடையவனல்ல; தலையிலும் கங்கையாகிய மானை யுடையவன் என்பாராய், “தலை மேல் ஒரு மான் ஏந்தி” என்று தேவர் உரைக்கின்றார். துனி - வெறுப்பு. துனியைத் துணி யெனக் கொண்டு எனது துணி ஒரு கோவணந்தான் என்பவர், “துகில் கோவணம் காண்” என்று இசைக்கின்றார். துகில் - ஆடை. துகிலின்றும் துணித்தது துணி யென்று அறிக. பனிமால் - குளிர் நடுக்கம் பயக்கும் காம மயக்கம். வரைதல் - போக்குதல். பனி மால் வரை, மால் பனிவரை என இயைந்து, பெரிய பனிமலையாகும்; அஃதாவது இமயமலை. இதுவும் வேறுபட்டு இங்கித மாலையிற் (1860) காணப்படுகிறது.

     (11)