பக்கம் எண் :

177.

    நேய நின்புடை நின்றிடாத என்
    மாய நெஞ்சினுள் வந்தி ருப்பையோ
    பேயனேன் பெரும் பிழை பொறுத்திடத்
    தாய நின்கடன் தணிகை வாணனே.

உரை:

     தணிகையில் வாழ்பவனே, எவ்வுயிர்க்கும் நின் பக்கம் நில்லாது ஓடும் அன்பு பொருந்திய என் மாய நெஞ்சின்கண் எழுந்தருளி இருப்பாயோ? பேயனைய என்னுடைய பெரிய பிழைகளைப் பொறுப்பது தாயின் தன்மை கொண்ட நினக்குக் கடன், காண், எ. று.

     வாழ்பவன், வாழ்நன் என்றாகி வாணன் என மருவியது. நேயம்-அன்பு. ஞானத்தால் உணரப்படும் மெய்ப் பொருளையும் நேயம் என்பர். அன்பில்லாத என் நெஞ்சின்கண் அன்பே உருவாகிய நீ இருத்தல் இல்லை யாதலால், “நின்புடை நேயம் நின்றிடாத என் நெஞ்சினுள் வந்து இருப்பையோ” என வினவுகின்றார். மறைந்த எண்ணங்களால் மயங்கும் நெஞ்சம் “மாய நெஞ்சு” எனப்படுகிறது. “மாயமாய மனங் கெடுப்பானை மனத்துளே மதியாய் இருப்பானை” (நீடூர்) என நம்பியாரூரர் உரைப்பது காண்க. மாய மனம் கெடுத்து அதனுள் மதியாய் இருக்கும் செயல் பற்றி, “என் நெஞ்சினுள் வந்திருப்பாயோ” என்று கேட்கின்றார். பேயனேன்-பேய் போல் அலைபவன். பிழை பொறுத்தல் பேரருளாளர்க்குக் கடனாதலால், “பெரும்பிழை பொறுத்திடத் தாய நின் கடன்” என்று சாற்றுகின்றார். தாயின் தன்மையுடைய என்பது “தாய” எனப் பெயரெச்சமாயிற்று; சடையை யுடைய வள்ளல் என்பது “சடைய வள்ளல்” (சீவக) என வந்தாற் போல.

     இதனால் பேய்த் தன்மை யுடைமையாற் பெரும் பிழை செய்வேனாயினும் தாய்மைப் பண்பால் பொறுத்தல் நினக்குக் கடன் என முறையிட்டவாறாம்.

     (27)