பக்கம் எண் :

98. இங்கித மாலை

கலைமகள் வாழ்த்து

நேரிசை வெண்பா

1770.

     அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற்
     பொன்பொருவு மேனி அயன்பூவின் - மன்பெரிய
     வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக்
     காக்கக் கடனுனக்கே காண்.

உரை:

     அன்பர் மனத்தினின்றும் நீங்குதல் இல்லாத தாயே; தாமரை மலர்மேல் பொன்னிறம் கொண்ட பிரமனது வாயாகிய பூவின் கண் உள்ள மிகப் பெரிய சொற்செல்வியே, நினது திருவடியாகிய மலரின்கண் புகலைடைந்த எனக்குச் சொற் பிழை யுண்டாகாமற் காக்கும் கடன் உனக்கே யாம். எ.று.

          அன்பர் அன்பின்கண் தங்குபவளாதலால் “அன்பர்பால் நீங்கா என் தாயே” என்று போற்றுகிறார் நம் வடலூர் வள்ளல். தனியருள் புரிதல் தோன்றத் “தாயே” என்று புகல்கின்றார். தன்னைக் கலைமகட்கு மகன்மை கொண்டாடுவது பற்றி, “என் தாயே” என இயம்புகிறார். திருமால் உந்தியில் முளைத்த தாமரைமேல் பிரமன் வீற்றிருக்கின்றான் என்பது கொண்டு, “தாமரை மேல் அயன்” என்றும், பிரமன் பொன்னிற மேனியனாதல் விளங்கப் “பொன் மருவு மேனி அயன்” என்றும் இயம்புகின்றார். செயற்கு முன்னே நிலைத்த புகழைப் பயப்பது சொல்லாதலின் “மன் பெரிய வாக் கிறைவி” என்று வழுத்துகின்றார். வாக்கிறைவி - சொல்லுலகும் பொருளுலகம் என்ற இரண்டினுள் சொல்லுலகுக்குத் தலைவியாதலால், கலைமகள் “வாக்கிறைவி” ஆயினாள் என அறிக. சரணம் - புகல். தாள் மலர் - திருவடியாகிய தாமரை. வாயிற் பிறக்கும் சொற்களைப் பிழை யுறாமல் தோற்றுவித்தல் சொற்செல்வியின் திருவருளாதல் கண்டு, “காக்கக் கடன் உனக்கே காண்” என்று கூறுகின்றார். வாக்கிறைவி யாதலின் சொல்லுதல் வேண்டுமோ எனின், சொல்லில் வழியே சொல்லா தொழிவ தெனச் சான்றோர் பணித்தலின், சொல்லுதல் வேண்டிற்றென உணர்க.

     இஃது இந்நூலைப் பாட எழுந்த நினைவுக்குச் சொல் வடிவம் தரும் தேவியைப் பராவியது.