1773. தண்ணார் மலரை மதிநதியைத்
தாங்குஞ் சடையா ரிவர்தமைநா
னண்ணா லொற்றி யிருந்தவரே
யைய ரேநீர் யாரென்றே
னண்ணா ரிடத்து மம்பலத்து
நடவா தவர்நா மென்றுசொலி
யெண்ணா தருகே வருகின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடி, சேடி, தண்ணிய ஆத்தி மலரையும் பிறைத் திங்களையும் கங்கையாற்றையும் தாங்கும் சடையையுமுடைய இவரை, நான் அண்ணலே, ஒற்றியூர்க்கண் இருப்பவரே, தலைவரே, நீர் யார் என்று கேட்டேன்; நண்ணுதற் காகாதவரிடத்தும் அம்பலத்திலும் முறையே செல்லாதவரென்றும் காளியொடு வாத நடம் புரிபவர் என்றும் பொருள்பட மொழிந்து, இளம் பெண் என எண்ணாமல் எனக்கு அருகில் வருகின்றார். ஏடீ, இவ்வுரையாட்டின் பொருள் என்னையோ? எ.று.
தண்ணார் - குளிர்ந்த ஆத்தி மலர். அதனால் சிவனை “ஆத்தி சூடி” என்பது வழக்காயிற்று. நீர் யார் என்று வினவுபவள், ஒற்றியிருந்தவரே என்றும், ஐயரே என்றும் குறிப்பன பலிவேண்டி வந்தார்க்கு வேறு பொருள்படுகின்றன; ஒற்றியிருந்தவர் - விலகியிருந்தவர். ஐயர் - கணவர்; “எனக்கு மாகாது என்னைக்கும் ஆகாது” (குறுந். 27) என்றாற்போல, அவட்கு, “நண்ணாரிடத்தும் அம்பலத்தும் நடவாதவர் நாம் என்று” சொல்வது வேறு பொருள் தருகிறது. நண்ணாரிடத்து நண்ணாமல் எதிரே நண்ணியோரிடத்து அருகில் நணுகுபவர் என்றும், அம்பலத்தில் வழக்காடுதற்கன்றி வெறிதே செல்லாதவர் என்றும் வேறு பொருள் தருவது காண்கின்றாள். நம்பியாரூரர் பொருட்டு அம்பலமேறி வழக்காடிய வரலாறு நினைக்கப்படுகிறது கணவரே, ஒற்றியிருந்தீரே என்றமையால், நண்ணாரிடத்து நடவாமல் நண்ணியோரிடத்து நணுகுவோம் என்று சொல்லி, அருகு வருகின்றார் எனவும், இவ்வுரையாட்டு அம்பலத்தில் நடவாமையால் எவர்க்கும் அஞ்சாமல் என்று பொருள்பட “எண்ணாது அருகு வருகின்றார்” எனவும், தோழி என்று பொருள்பட “எண்ணாது அருகு வருகின்றார்” எனவும், தோழி கூறும் முறையில் பொருள் அமையுமாறு காண்க. “நடவாதவர்” என்பதைப் பிரித்து நண்ணாரிடத்து நட, அம்பலத்து வாதவர் நாம் என்றார் எனப் பொருள் கூறுவாருமுளர். (2)
|