பக்கம் எண் :

1780.

     ஆரா மகிழ்வு தருமொருபே
          ரழக ரிவரூ ரொற்றியதா
     நேராய் விருந்துண் டோவென்றார்
          நீர்தான் வேறிங் கிலையென்றேன்
     வாரார் முலையாய் வாயமுது
          மலர்க்கை யமுது மனையமுது
     மேரா யுளவே யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி, தெவிட்டாத இன்பம் அருளும் ஒப்பற்ற பேரழகராகிய இப் பிச்சைத் தேவர்க்கு ஊர் திருவொற்றியூராம்; நேராய் வந்து விருந்துண்டோ என்று கேட்டாராக, நீரேயன்றி வேறே இங்கு இல்லை யென்றேன்; கச்சணிந்த மார்பையுடையவளே, மலர் போன்ற வாயமுதும் பூப்போன்ற கையமுதும் மனைக்குட் பெறலாகும் அமுதும் அழகுறவுள்ளனவே என உரைக்கின்றார்; ஏடி, சேடி, இது என்னே. எ.று.

     மகிழுந்தோறும் விருப்பம் உற்ற வண்ணமிருப்பது பற்றி “ஆரா மகிழ்வு” என்று கூறுகின்றாள். அதனாற்றான் தெவிட்டாத இன்பம் என்பது உரை கூறப்பட்டது. தேவரைக் கண்ட மாத்திரையே அவருடைய மேனிநலம் நங்கையின் மனத்தைக் கவர்ந்து கொண்டமையின் “பேரழகர்” எனவும், திருவொற்றியூரினர் என்பது அவரால் அறிந்து கொண்டமை புலப்பட, “இவர் ஊர் ஒற்றியதாம்” எனவும் எடுத்துரைக்கின்றாள். வந்தவர், அயல் வீடுகளை நாடாமல் நேரே தன் வீட்டுக்கு வந்தமை தோன்ற, “நேராய் வந்தா”ரென்றும், தன்னைக்கண்டு உன் மனைக்கு வேறு விருந்து வந்துளதோ என்று கேட்பாராய் “விருந் துண்டோ என்றார்”; அவர்க்கு உம்மையன்றி விருந்து வேறில்லை என்று விடை விடுப்பேனாய், “நீர்தான் அன்றி வேறு இங்குஇலை” என்றேன் என நங்கை சேடிக்குச் சொல்லுகின்றாள். அதுகேட்ட தேவர் கச்சணிந்த மார்பை நோக்கி, உன்பால் நீரேயன்றி வாயமுதும் கையமுதும் மனைக்கண் அமுதும் நன்றாய் உள்ளனவே என்பாராய், “வாரார் முலையாய் வாயமுதும் மலர்க்கை யமுதும் மனையமுதும் நேராய் உளவே என்கின்றார்” என்று உரைக்கின்றார்.

     நேராய் வந்தது, நங்கையின் நலத்தில் கருத்துற்று வந்தமை தோன்ற நிற்கிறது. நங்காய், உன் மனையில் என்போன்ற விருந்தினை ஏற்பதுண்டோ என்ற கருத்தால் “விருந்து உண்டோ” என்றார். நங்கை யொருத்தி மனைக்கண் நேர்படுதலால், ஆடவர் இல்லையாயின் அயலகம் நாடிச் செல்ல வேண்டுமே என எண்ணினமை புலப்பட “விருந்துண்டோ” என்றது அமைகிறது. அதற்கு அவள், உங்கள் மனைக்கு என்னின் வேறு விருந்தினர் வந்துளரோ என வினவியதாகக் கொண்டு, “நீர்தான் விருந்து; வேறு எவரும் இல்லை, வருக” என்று பொருள் கொள்ளுமாறு, “நீர்தான்; வேறு இங்கு இலை” என மொழிகின்றாள். கச்சணிந்த மார்பு இனிது காட்சிதர நின்று, இங்கு வேறு இல்லை என்று கூறிய விடை, காதற்குறிப்பு வைத்துரையாடற்கு இடம் தந்தமையின், நின்பால் வாயிதழமுதமும், கையாற் கலவின்பமும், மனைக்கண் அணை மகிழ்வும் உள்ளனனவே என்று குறிப்புப் பொருள் படுமாறு, “வாயமுதும் மலர்க்கையமுதும் மனையமுதும் ஏராய் உளவே” எனக் கூறுகின்றார். வெளிப்படையில் வாயமுது இன்சொல்லையும், கையமுது உண்பலியையும், மனையமுது இருக்கையையும் குறிப்பது காணலாம். கவவு இன்பம் - புல்லுதலாற் பிறக்கும் இன்பம். அணை மகிழ்வு - மலரணையின்பம். விருந்தோம்பும் அறம் உண்டியும் உறையுளும், மருந்துமென மூன்றாம்; கையமுது உண்டியின் மேலும், மனையமுது உறையுள் மேலும்; வாயமுது காம நோய்க்கு மருந்தாதன் மேலும் நிற்பது, காண்க.

     (9)