பக்கம் எண் :

1781.

     அடுத்தார்க் கருளு மொற்றிநக
          ரைய ரிவர்தா மிகத்தாகங்
     கடுத்தா மென்றார் கடிதடநீர்
          கண்டீ ரையங் கொளுமென்றேன்
     கொடுத்தாய் கண்ட திலையையங்
          கொள்ளு மிடஞ்சூழ்ந் திடுங்கலையை
     யெடுத்தாற் காண்பே மென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி, தன்னை யடைந்தவர்க்கு வேண்டுவன நல்கியருளும் திருவொற்றியூர்த் தலைவராகிய இவர் மிகவும் தாகம் முடுகுற்று வந்ததாகச் சொன்னாராக, எம்மூர்க் காவலமைந்த குடிநீர்க் குளத்தை அறிந்திருப்பீர்; அக் குளத்து அழகிய நீர் தரக்கொள்ளும் என்று சொன்னேன்; வாயாற் கொடுத்தாயே யன்றி யாம் கண்டதில்லை; கொள்ளப்படும் ஐயத்தை மறைத்திருக்கும் சீலையை எடுத்தால் கண்டு கொள்வேம் என்று கூறுகின்றார்; ஏடி, சேடி, இது தான் என்னையோ. எ.று.

     ஒற்றியூர்க்கண் இறைவன் தியாகமூர்த்தி யாதலால், அவரை “அடுத்தார்க்கு அருளும் ஒற்றிநகர் ஐயர்” என்று புகழ்கின்றாள். அவரை வள்ளல் என்பதும் இது பற்றியே என அறிக. தாகம் மிக்குற்று முடுகுதலைப் புலப்படுத்தவே “கடுத்தாம்” என்று கூறுகின்றார். குடிநீர் கெடாமைப் பொருட்டுக் காவலமைத்தல் வழக்கமாதலால், குடிநீர் நிலை கடிதடம் எனப்படுகிறது. நீர் வேட்கை மிக்கு முடுகுதலால் வந்தேன் என்பாராய், பிச்சைத்தேவர், “மிகத்தாகம் கடுத்தாம்” என்று சொல்லுகின்றார். அவர்க்குப் பலிதரும் நங்கை, “எம்மூர்க் கடிதடநீர் அறிந்திருப்பீர்; அதனைத் தருவேம்; உண்டு தாகம் தணிமின்” என்பாளாய் “கடிதடநீர் கண்டீர் ஐயம் கொளும்” என்று உரைக்கின்றாள். குடிநீரை அவள் ஐயம் என்றது ஐ அம் எனப் பிரித்து சுவையால் வியப்புடைய நீர் எனப் பொருள் தருவதாகும். கடிதடம் என்னும் சொல் மகளிர் அல்குலையும் குறித்தலால், பிச்சைத்தேவர் அதனைக் கருத்துட் கொண்டு சொல்லாடுகின்றார். கொள்ளும் என்றது கொடுத்தாகக் கொண்டு, “கொடுத்தாய் கண்டது இல்லை” என்று சொல்லி, இடையில் உடுத்திருக்கும் கலை (உடை) சூழ்ந்து மறைத்தலால், அதனை எடுத்தால் கடிதடம் காணலாம் என்பாராய், “ஐயம் கொள்ளும் இடம், “சூழ்ந்திடும் கலையை எடுத்தால் காண்போம்” என்று சொல்லுகின்றார். ஐயம் கொள்ளும் இடம் இடை; சிறுத்து உண்டோ இல்லையோ என ஐயத்துகிடமாதல் பற்றி இடம் ஐயம் கொள்ளும் இடம் எனப்படுவதாயிற்று. முன்னே கூறிய கடிதடமுமாம்.

     கடிதடநீர் கண்டீர் என்றாட்கு அவர்கண்டதில்லை என்பதும், கலையை எடுத்தாற் காண்பேமென்பதும் நயமுற அமைந்திருக்குமாறு அறிக. ஐயம் திரிபுகட்கு ஏதுவாகிய கலையுணர்வு நீங்குமாயின், உண்மைக் காட்சி இனிது தலைப்படும் என்னும் அறிவுநூற் கருத்தும் அமைவது காண்க.

     (10)