1782. இந்தா ரிதழி யிலங்குசடை
யேந்த லிவரு ரொற்றியதாம்
வந்தார் பெண்ணே யமுதென்றார்
வரையின் சுதையிங் குண்டென்றே
னந்தார் குழலாய் பசிக்கினும்பெண்
ணாசை விடுமோ வமுதின்றே
லெந்தா ரந்தா வென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி, பிறைத்திங்களும் ஆத்தி மாலையும் கொன்றைக் கண்ணியும் விளங்கும் சடையையுடைய பிச்சைத் தேவராகிய இவரது ஊர் திருவொற்றியூராம்; என் மனைக்கு வந்த அவர் வரவேற்ற என்னை நோக்கிப் பெண்ணே அமுது வேண்டும் என்றாராக, வரையின்றி யுண்டற்கு இங்கு அமுதுண்டு என்று சொன்னேன்; அது கேட்டு, அழகிய கூந்தலையுடையவளே, என என்னை யழைத்துப் பசிவருத்திய போதும் பெண்ணாசை விடுமோ? விடாதன்றோ; ஆகவே நின்பால் அமுதில்லையாயின் எமக்குத் தாரமாயினும் தருக என உரைக்கின்றார்; ஏடி, இது தான் என்னே. எ.று.
கொன்றை, மாலையும் கண்ணியுமாம்; ஆயினும் ஆத்திமாலை யுண்மையின் கொன்றை கண்ணியாகக் கொள்ளப்பட்டது. “பூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன்றிறைஞ்சிடுக” என்பர் குமரகுருபரர். ஏந்தல் - உயர்ந்தவர், தலைவர். பெண்ணமுது வேண்டுமெனக் கருத்துக்கொண்டு, பெண்ணே அமுதே எனப் பிச்சைத்தேவர் கேட்க, பெண்ணே என்றது தன்னைக் குறிப்பதாகவும், அமுது தனக்கு வேண்டும் என்பதாகவும், நான் பொருள்கொண்டு, 'அமுதமாகிய வெண்பால் மிகவுளது; வரையின்றி உண்ணலாம்' என்பேனாய், “வரையிற் சுதை இங்கு உண்டு என்றேன்” என்றாள். சுதை - பாலாகிய அமுதம் எனக் குறித்ததை விடுத்து, சுதன் என்பதற்குப் பெண்பாற் சொல்லாகிய சுதை என்று கொண்டு பெண்ணெனப் பொருள்செய்து, “பசிக்கினும் பெண்ணாசை விடுமோ; விடாதாகையால், அமுது இல்லையாயின் பெண்ணாகிய யாம் கருதிய பொருளைத் தருக என்பாராய். “எம் தாரந்தா என்கின்றார்” என்று சொல்லுகின்றாள்.
“பெண்ணமுது வேண்டும்” என்றார்க்குப் பெண்களில் அமுது போன்றவள் பார்வதியாகிய மலைகளாதலால் அவள் உள்ளாள் என்றற்கு “வரையின் சுதை இங்கு உண்டு” என்றாள் என்க. வரையின் சுதை - மலைமகள். “அந்தார் குழலாய்” என்றவிடத்து, அழகு குறிக்கும் அந்தம் என்ற சொல் ஈறு குறைந்து அந்தென நின்றது. உண்பலி வேண்டுவோர் பெண் கேட்பதற்கு அமைதி கூறுதற்காகப் “பசிக்கினும் பெண்ணாசை விடுமோ” எனவுரைக்கின்றார். பெண்ணமுது வேண்டினவர்க்கு அமுது இல்லையாயின் பெண் தருவது முறையென்பாராய். “அமுதின்றேல் எம்தாரம் தா என்கின்றார்.” தாரம் - மனைவி. வரையிற் சுதை இங்கு உண்டு என்றார்; வரைச் சுதையாகிய பார்வதி எமக்கு மனைவி; அவளை என்பால் தருக என்ற பொருள் தோன்ற இவ்வாறு கூறினார் என்க. பெண்ணாசை விடாது என்றவிடத்துத் தரற்கு பெண்ணில்லையாயின் ஆசையைத் தருக என்பாராய் “தாரம்தா” என்றாராம். தாரம் - கயிறு; அது பாசமாய் ஆசையாத லறிக. (11)
|