1783. தன்னந் தனியா யிங்குநிற்குஞ்
சாமி யிவரூ ரொற்றியதா
மன்னந் தருவீ ரென்றார்நா
னழைத்தே னின்னை யன்னமிட
முன்னம் பசிபோ யிற்றென்றார்
முன்னின் றகன்றே னிவ்வன்ன
மின்னந் தருவா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி, தனித்துப் போந்து இங்கே பலி வேண்டி நிற்கும் சாமியாகிய இவரது ஊர் திருவொற்றியூராம்; சோறு வேண்டும் என்ற பொருள்பட அன்னம் தருவீர் என்று சொன்னார்; நானும் இவர்க்குச் சோறு இடவேண்டித் தோழியாகிய உன்னைக் குரலிட்டழைத்தேன்; நீ அது கொணர்தற்கு முன்னமே பசி போய்விட்டது என்று சொன்னார்; நானும் இவர் முன்பு நில்லாமல் நீங்கினேன்; நீங்கி நடப்பது கண்டு, இந்த அன்னத்தை இன்னுமும் தருக என்று சொல்லுகின்றார்; ஏடி, இது என்னையோ. எ.று.
மிகத் தனிமை என்பது 'தன்னந்தனி' என வந்தது. முடிமேல் கங்கையும் ஒருபால் மங்கையும் விளங்க வரும் சிவன், பிச்சைத் தேவராய்த் தனித்து வருமாறு தோன்ற “தன்னந்தனியாய் இங்கு நிற்கும் சாமி” என உரைக்கின்றாள். “மங்கையற்கோர் பாகமாக வாள் நிலவார் சடைமேல் கங்கை யங்கே வாழ வைத்த கள்வன்” (பல்லவ) என்று ஞானசம்பந்தர் கூறுவர். அழைத்தல் - குரலெடுத்துக் கூப்பிடுதல். “அன்னம் தருவீர்” என்று கேட்டாராக, அதனைக் கொணர்ந்து “இடவிரும்பி நின்னைக் குரலிட்டுக் கூப்பிட்டேன் என்பாளாய், “நான் அழைத்தேன் நின்னை அன்னமிட” என்றாள். குரல் கேட்டதும், பலி கொண்டு வருதற்கு முன்னமே எனக்குப் பசி போய்விட்டது என அன்பு மிக வுரைத்தார் என்பாள், “முன்னம் பசி போயிற்று என்றார்” என வுரைக்கின்றார். குரலோசை செவிச்சுவை யமுதமாய்ப் பசிபோக்கிற்று என்பது கருத்து. அது கேட்டு மகிழ்வுடன் அவர் முன்பு நில்லாமல் மெல்ல நடந்தேன்; நடை அன்னம் போன்றிருக்கிறது என்னும் கருத்துத் தோன்ற, “இவ்வன்னம் இன்னும் தருவாய்” என்கின்றார். இவர் சொல் இருந்தவாறு என்னே என்பது. (12)
|