1784. மாறா வழகோ டிங்குநிற்கும்
வள்ள லிவரு ரொற்றியதாம்
வீறா முணவீ யென்றார்நீர்
மேவா வுணவிங் குண்டென்றேன்
கூறா மகிழ்வே கொடுவென்றார்
கொடுத்தா லிதுதா னன்றென்றே
யேறா வழக்குத் தொடுக்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி, மாறாத அழகுடன் இங்கு வந்து நிற்கும் வள்ளலாகிய இவருடைய ஊர் ஒற்றியூராம். இவர் என்னை நோக்கி மேலான உணவு தருக என்று கேட்டாராக, நீர் உண்டிராத உணவு இங்கே உளது என வுரைத்தேன்; இது கேட்டதும் வாயாற் கூற முடியாத மகிழ்ச்சி யுண்டாகிறது; நிற்க உணவு தருக என்று கேட்டார்; நானும் விரைந்து கொடுத்தால், இதுவன்று எனச் சொல்லிச் செல்லா வழக்குத் தொடுக்கின்றார்; ஏடீ, இது என்னே? எ,று.
மிகுதல் குறைதலின்றி என்றும் ஒரு தன்மைத்தான அழகு “மாறா அழகு” எனப்படும். “வீறாம் உணவு” என்றவிடத்து வீறு என்றது பிறிது எதற்குமில்லாத தனிச் சிறப்பு என்னும் பொருளது, “வீறதார் தமிழ் விரகன்” என்றாற் போல், பலியிடும் நங்கையை உயர்த்ததற்கு “ஈ” என்றார். நீவிர் இதுகாறும் உண்டிராத சிறந்த உணவே யுளது என்பாளாய் “நீர்மேவா உணவு இங்கு உண்டு” என்றாள். காய்கனி வகைகளும் பாலும் தேனுமாய உணவு “நீர் மேவா” உணவாம் என அறிக. உணரப்படுவதேயன்றி உரைக்கப்படுவதன்மையின் மிக்க உவகையைக் “கூறா மகிழ்வே” என்றும், அதனையே கொடு என்பாராய், “கொடு” என்றும் பிச்சைத்தேவர் கூறினார். அவர்க்கு அவளும் உயரிய உணவே கொடுத்தாளாக, நீர் மேவா உணவு என அவள் கூறியதற்கு நீவிர் விரும்பாத சிற்றின்பமாகிய உணவு எனக் கருதிக்கொண்டு, நீ உண்டென்றது, இது அன்று என மறுக்கின்றார் என்பாள், “இதுதான் அன்று என்று ஏறா வழக்குத் தொடுக்கின்றார்” என உரைக்கின்றாள். கொடு என்ற ஒன்றைக் கொடுக்கிறபோது அன்றென மறுத்து வழக்காடுவது நேரிய வழக்கின்மையின் “ஏறாவழக்கு” என்றனள். சிற்றின்பம் நல்குதற்கு இசைந்திலள் என ஒருத்தி மேல் ஒருவன் வழக்கிடுவது எந்த மன்றத்திலும் இதுகாறும் வாராத வழக்கு என்பது தோன்ற இவ்வாறு கூறப்பட்டதெனினும் அமையும்.. (13)
|