பக்கம் எண் :

18.

    எந்தைநினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும்
        ஏக்கற்றி ருக்கும் வெறுவாய்
        எங்கள் பெருமானுனை வணங்காத மூடர்தலை
        இகழ்விற கெடுக்குந் தலை
    கந்தமிகு நின்மேனி காணாத கயவர்கண்
        கலநீர் சொரிந்த அழுகண்
        கடவுணின் புகழ்தனைக் கேளாத விணர்செவி
        கைத்திழவு கேட்கும் செவி
    பந்தமற நினையெணாப் பாவிகள்தம் நெஞ்சம்
        பகீரென நடுங்கு நெஞ்சம்
        பரமநின் றிருமுன்னர்க் குவியாத வஞ்சர்கை
        பலியேற்க நீள் கொடுங்கை
    சந்தமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     அழகு மிக்க சென்னைக் கந்த கோட்டத்துள் இலங்கும் கோயிலையிடமாகக் கொண்ட கந்த வேளாகிய பெருமானே, தண்ணிய ஒளியையுடைய தூய மணிகளுள் சைவமணியாகிய சண்முகங்களை யுடைய தெய்வமணியே, எந்தையாகிய நின்னை வாழ்த்தாத பேய் மக்களின் வாய், குடிக்கக் கூழுக்காகப் பிறர் வாயில் முன் ஏங்கி நிற்கும் வெறுவிய வாயாகும்; எங்கள் பெருமானாகிய உன்னை வணங்குதல் செய்யாத மூட மக்களின் தலை, எரிக்கப்படும் விறகு சுமக்கும் தலையாகும்; ஞான மணம் கமழும் நின் திருமேனியைக் காணாத கீழ் மக்களின் கண்கள், கலமளவிற் புன்கணீர் சொரியும் நிலையில் அழுங்கண்ணாகும்; கடவுளாகிய நின் புகழைக் கேட்காத வீணர்களின் காது, கீழான சாவு கேட்கும் காதுகளாகும்; பந்தமற வருளும் நின்னை எண்ணுதல் இல்லாத பாவிகளின் நெஞ்சம், அச்சத்தால் பகீரென நடுங்கும் நெஞ்சமாம்; பரமனாகிய நினது திருமுன் கூப்பாத வஞ்சகருடைய கைகள், பிறர்பாற் பிச்சைக் கேந்தும் வளையும் கைகளாகும் எனின் அவரது பிறப்பே மண்ணுக்குச் சுமையாம், எ. று.

     சந்தம் - அழகு. உலகவர் புகழும் வனப்பு மிக்க தாகலின், “சந்தமிகு சென்னை” என்று புகழ்கின்றார். முருகப் பெருமானை வாயால் வாழ்த்தாதாரைப் “பேயர்” என்றும், தெருத்தோறும் வீடுதோறும் சென்று மனையவர் மனம் இரங்குமாறு ஏங்கி நின்று ‘கூழ் இடுக அம்மா தாயே’ என்பதன்றி ‘முருகா’ என வுரையாமையால், “கூழுக்கும் ஏக்கற்றிருக்கும் வெறுவாய்” என்றும் கூறுகிறார். கந்த வேளை வணங்காதாரை “மூடர்” என்பதால் அவர் தலையை விறகுத் தலை யென்பார், “இகழ் விறகெடுக்கும் தலை” என்று இழிக்கின்றார். எரித்துச் சாம்பராக்கப்படுதலால் “இகழ் விறகு” என வுரைக்கின்றார். ஞான மூர்த்தியாதலால் முருகன் திருமேனி ஞான மணம் கமழ்வ தென்றற்குக் “கந்தமிகு நின்மேனி” என்று சிறப்பிக்கின்றார். நக்கீரரும் “மணங்கமழ் தெய்வத் திளநலம் காட்டி” (முருகு) என்பது காண்க. முருகப் பிரான் திருமேனியைக் காணாதவர்களைக் “கயவர்” என்பது, ஞானமின்மைபற்றி. களகளவெனச் சொரியும் நீரைக் “கலநீர்” என்றார் எனினும் ஆம். “களகள சொரிந்தனகயற்கண் ஆலியே” என்பர் கம்பர். கடவுள் புகழைக் கேளாதவரை, “வீணர்” என்று பழிக்கின்றார். நாளைப் பயனின்றித் கழித்தலால், சிறுமைத்தாகிய சாவு, கைத்து இழவு எனப்படுகிறது. கைத்து-சிறுமை யுடையது. பிறப்பிறப்புக் கேதுவாகிய பந்தம் இறைவனை நினைத்தலால் கெடுமென்பது பற்றி, “பந்தமற நினைஎணாப் பாவிகள்” என்று பகர்கின்றார். “தந்தைதாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரமென்னும், பந்தம் நீங்காதவர்க் குய்ந்து போக்கில்” (ஆரூர்) என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. நடுங்கும் நெஞ்சின்கண் ஒருமை நினைவு நிலவாதாகலின், “பகீரென நடுங்கும் நெஞ்சம்” என ஒரு குறையாகப் பேசுகிறார். பரமன் திருமுன் குவியாமல் பொருளுடையார் முன்பு குவிதலால், அக் கைகளையுடையாரை “வஞ்சர்” என்றும், உண்பலி ஏற்றற்கு வளைந்து ஏந்துமாறு புலப்படப் “பலி ஏற்க நீள் கொடுங் கை” என்றும் பழிக்கின்றார். எனின் அவரது என்பது முதலாயின குறிப்பெச்சம்.

     இதனால் முருகப் பெருமானை வாழ்த்துதல் வணங்குதல் முதலியன செய்யாவழிப் படும் இகழ்ச்சி கூறியவாறாம்.

     (18)