பக்கம் எண் :

180.

    கால் குறித்தவென் கருத்து முற்றியே
    சால் வளத் திருத் தணிகை சார்வனென்
    மால் பகைப்பிணி மாறி யோடவே
    மேல் குறிப்பனால் வெற்றிச் சங்கமே.

உரை:

     வளம் நிறைந்த திருத்தணிகைப் பதியைத் திருவடியையே கருத்திற் கொண்ட என் நோக்கம் முற்றுப் பெறும் பொருட்டு அடைவேன்; எனக்குற்ற பெரிய பகையாகிய நோய்கள் நீங்கிப் போம்; மேலே வெற்றிச் சங்கம் ஊதுவன், எ. று.

     வளம் சால் திருத்தணிகை என மாறுக. கால்-திருவடி. திருவடிப் பேற்றையே நினைந்த வண்ணம் இருக்குமாறு புலப்படக் “கால் குறித்த என் கருத்து” என்று கூறுகின்றார். திருத்தணிகையைச் சார்ந்தால் பகைப்பிணி நீங்கும்; அந்த வெற்றி குறித்துச் சங்கு முழக்குவன் எனத்தாம் எய்தும் வீறுபாடு விளம்புகின்றார். அறிவை மயக்கும் பிறவிப் பிணியை “மால் பகைப் பிணி” என்றார் எனினுமாம்.

     இதனால் திருவடிப் பேற்றால் தமக்கு எய்தும் பெருநலத்தை எடுத்தோதியவாறு.

     (30)