பக்கம் எண் :

183.

    மணியே யடியேன் கண்மணியே
        மருந்தே யன்பர் மகிழ்ந்தணியும்
    அணியே தணிகை யரசே தெள்
        ளமுதே யென்ற னாருயிரே
    பிணியேய் துயரால் வருந்தி மனப்
        பேயா லலைந்து பிறழ்கின்றேன்
    தணியேன் தாகம் நின்னருளைத்
        தருதல் இலையேல் தாழ்வேனே.

உரை:

     திருத்தணிகையில் எழுந்தருளும் அருளரசே, மணி போல்பவனே, அடியேனுக்குக் கண்மணியாய் உள்ளவனே, மருந்தே, அன்புடையார் விரும்பி யணியும் அணியாயவனே, தெளிந்த அமுது போல்பவனே, என்னுடைய அரிய உயிர் போன்றவனே, பிறவிப் பிணியால் உளதாகும் துன்பத்தால் வருந்தி மனமாகிய பேயால் அலைப்புண்டு நெறியின் நீங்கிக் கெடுகின்றேன்; அதே நிலையில் நினது திருவருள் தாகம் மிகுந்து தணியா வெம்மை யுற்றேனாதலால் திருவருளாகிய நன்னீரைத் தாராயாயின் கீழ்மை யுறுவேன், காண், எ. று.

     தணிகைப் பதிக்கண் இருந்து அருளாட்சி புரிகின்றா ரென்பார், “தணிகை யரசே” என்றும், நிறத்தாலும் ஒளியாலும் மாணிக்க மணியை நிகர்த்தலால் “மணியே” என்றும், பொருளின் மெய்ம்மை காணச் செய்தலால் “கண் மணியே” என்றும், எய்தும் பிணி வகைகட்கு மருந்தாய் நின்று போக்குவதால் “மருந்தே” என்றும், அன்புடையார் தமது மெய்யன்பு கொண்டு சொல்லும் பொருளும் பெய்து அணிசெய்து மகிழ்வுறும் அழகுருவாய் விளங்குதலால் “அன்பர் மகிழ்ந்தணியும் அணியே” என்றும், நெஞ்சு வாயாக இன்பம் பெருக நினைக்கப்படுவதால் “தெள்ளமுதே” என்றும், உயிர்க் குயிராய் அறிவதறிய அருளுதலால் “என்றன் ஆருயிரே” என்றும் கூறுகின்றார். உடலில் தோன்றும் பல்வகைப் பிணிகளால் நோய் மிகுந்து வருத்த அது பொறாமல் மனம் பேயாய் அலைவதால் நன்னெறிக்கண் நிற்றற்குரிய உயிரறிவு அதனினின்றும் மாறிக் குற்றப்படுவது பற்றிப் “பிணியேய் துயரால் வருந்தி மனப்பேயால் அலைந்து பிறழ்கின்றேன்” என்று புகல்கின்றார். இந்நிலையினும் என்னுள்ளத்தில் நின்னுடைய திருவருட் பேற்றின்கண் வேட்கை மிகுந்து பிறவாற்றால் தணியாத தாகமுற்றுத் தளர்கின்ற தென்பாராய்த் “தணியேன் தாகம்” எனவும், திருவருள் நீரைத் தாரா தொழியின் தாகவிடாய் பொறாது தீநெறிப்பட்டுக் கெட்டொழிவேன் என்பார், “நின்னருளைத் தருதல் இலையேல் தாழ்வேனே” எனவும் உரைக்கின்றார். தாகமென்ற குறிப்புருவகம் திருவருளை நன்னீராகக் கொள்விக்கிறது.

     இதனால் திருவருள் வேட்கை மிகுதி தெரிவித்தவாறு.

     (3)