பக்கம் எண் :

1856.

     ஞால நிகழும் புகழொற்றி
          நடத்தீர் நீர்தா னாட்டமுறும்
     பால ரலவோ வென்றேனைம்
          பாலர் பாலைப் பருவத்திற்
     சால மயல்கொண் டிடவருமோர்
          தனிமைப் போல ரியாமென்றே
     யேல முறுவல் புரிகின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; நிலவுலகை ஆதாரமாகக் கொண்ட புகழையுடைய திருவொற்றியூரின் கண் நடம்புரியும் நீவிர், கண் பொருந்திய நெற்றியை உடையவரன்றோ என்று கேட்டேனாக, யாம், இளம் பருவத் தோற்றம் உறுகையில் ஐம்பாலரான மகளிர் வருகின்ற தனித்தோற்றம் எய்தும் தன்மையுடையேம் என்று அதற்கேற்பப் புன்முறுவல் செய்கிறார்; இது தான் என்னேடி.

     புகழ்க்கு ஆதாரம் உலகமன்றி உலகத்து வாழும் மக்கள் அல்லராதலால், “ஞாலம் நிகழும் புகழ்” என்று சிறப்பிக்கப் படுகிறது. பாலம் - நெற்றி. நாட்டம் - கண். நீர் தானாட்டமுறும் பாலரலவோ என்றதனை நீவிர் விளையாடல் புரியும் இளம் பாலரல்லவோ என்று வினவியதாகக் கொண்டு, ஒரு பால் உமாதேவியைக் கூறாகவுடைமையால் ஐம்பாலர் எனவும், வாலைப் பருவத் தோற்றம் கொண்டு ஐம்பாலராகிய இளமகளிர் கண்டு மிகவும் காம மயல் கொள்ளுமாறு வீதியில் வரும் ஒரு தனிச்சிறப்புடைய தன்மையுடையவர் என்று பொருள் படும் படியாக, பாலைப் பருவத்தில் ஐம்பாலர் சால மயல் கொண்டிடவரும் ஓர் தனிப்பாலர் யாம் என்று சொல்லி முறுவல் புரிகின்றார். என நீண்ட விடைபகர்கின்றார் எனப் பலியிடும் நங்கை உரைக்கின்றாள். ஐம்பால் - முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை என ஐவகையாக முடிக்கப்படும் கூந்தல்.

     இதன்கண், நாட்டமுறும் பாலரல்லவோ என்றாட்குப் பாலப்பருவத்தில் ஐம்பாலர் கண்டு மயல் கொண்டிடவரும் தனிமைப் பாலர் எனவும், ஒரு பாலரலவோ என்றாட்கு ஐம்பாலர் எனவும், ஆண்பாலும் பெண்பாலும் கலந்து ஒருமைப் பாலராவது தோன்ற “ஓர் தனிமைப் பாலர்” எனவும் உரைத்தவாறு.

     (85)