1883. கூம்பா வொற்றி யூருடையீர்
கொடும்பாம் பணிந்தீ ரென்னென்றே
னோம்பா துரைக்கிற் பார்த்திடுனுள
ளுன்னில் விடமேற் றுன்னிடைக்கீழ்ப்
பாம்பா வதுவே கொடும்பாம்பாம்
பணிப்பாம் பதுபோற் பாம்பலவென்
றேம்பா நிற்ப விசைக்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; வளம் குன்றாத திருவொற்றியூரை யுடையவரே, கொடிய பாம்பை அணிந்திருக்கின்றீரே என்னோ காரணம் என்று வினவினேனாக, எதனையும் எஞ்சாது உரைப்பதாயின், கண்ணால் நோக்கினால், மனத்தால் உன்னுவேமாயின், விடமுடைத்தாய் உனது இடைக்கீழ் உள்ள பாம்பே கொடிய பாம்பாவதாம்; எம்மேற் பணியாகிய பாம்புகள் அப்பாம்பு போல்வனவல்ல என்று மனம் வருந்துமாறு உரைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.
கூம்புதல் - வளம் சுருங்குதல். வளம் பெருகிய வழி மலர்தலும், சுருங்கிய வழிக் கூம்புதலும் செல்வக் குடிகள் நிறைந்த ஊர்கட்கு இயல்பாதலால், ஒற்றியூரைக் “கூம்பா ஒற்றியூர்” என்று குறிக்கின்றாள். நஞ்சுடைமை பற்றிக் “கொடும்பாம்பு” என்று கூறுகிறாள். “பாம்பென்றாற் படையும் நடுங்கும்” என்பது பழமொழி. “அரவமொன்றாகத்து நீ நயந்து பூணேல் பரவித்தொழு திரந்தோம் பன்னாள்” என்றும், “நின்னுடைய தீய அரவொழியச் செல்கண்டாய், தூய, மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி விடவரவம் மேலாட மிக்கு” என்றும், (அற்புத. 27, 57) காரைக்காலம்மையார் கூறுவது காண்க. இடையின் கீழ் உள்ள அல்குற்குப் பாம்பின் படத்தை உவமம் கூறுபவாதலால், அதனைப் பாம்பென்றே குறிக்கின்றார். அல்குற் பாம்பு, வாயாலுரைப்பினும், கண்ணாற் காணினும், மனத்துள் நினைக்கினும் காம வுணர்ச்சியாகிய விடத்தையேற்றி மயக்குவது விளங்க “ஓம்பாதுரைக்கின் பார்த்திடின், உள் என்னில் விடமேற்று உன்னிடைக் கீழ்ப்பாம்பு” என வுரைக்கின்றார். ஓம்புதல், ஈண்டு விலக்குதல் மேற்று. உரைத்தல் முதலியவற்றைச் செய்பவர், செய்யக் கேட்பவர் ஆகிய இரு திறத்தார் உள்ளத்தும் காமவிச்சையாகிய விடத்தை உறுவித்தலால், “இடைக் கீழ்ப்பாம்பாவதுவே கொடும்பாம்பு” என்று கூறுகிறார். பணிப்பாம்பு - சிவன் பூணாரமாக அணிந்துள்ள பாம்புகள். ஏம்பல் - வருந்துதல். சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டு நின்தாள் சரண் என்று ஏம்பலிப்பார்கட்கு இரங்கு கண்டாய்” (திருவேகம். விருத்தம்) என நாவுக்கரசு உரைப்பதனால் அறிக.
இதன்கண், நங்கை தேவரைப் பார்த்துக் கொடும்பாம்பு அணிந்தீரே என்னோ என்றாட்கு, உன்னிடைக் கீழ்ப் பாம்பாவதுவே கொடும்பாம்பு; எமது பணிப்பாம்பு அது போல்வன வல்லகாண் என இகழ்ந்துரைத்தா ராயிற்று. (112)
|