1884. புயல்சூ ழொற்றி யுடையீரென்
புடையென் குறித்தோ போந்ததென்றேன்
கயல்சூழ் விழியாய் தனத்தவரைக்
காண லிரப்போ ரெதற்கென்றார்
மயல்சூழ் தனமிங் கிலையென்றேன்
மறையா தெதிர்வைத் திலையென்ற
லியல்சூ ழறமன் றென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; மழை மேகம் சூழ்ந்து தவழும் திருவொற்றியூரை யுடையவரே, யாது கருதி என்னிடம் வந்தீர் என்று கேட்டேனாக, கயல்மீன் போலும் விழிகளை யுடையவளே, தனம் உடையவரை இரப்பவர் சென்று காண்பது எதற்காக என எதிர்வினா விடுத்தார்; அவர்க்கு, மனத்தை ஆசையால் மயக்கும் தனம் இங்கே இல்லையே என மொழிந்தேன்; அது கேட்டு, தனத்தை மறைக்காமல் நன்கு தெரியும்படி வைத்து இல்லையென்று வாயாற் சொல்வது நல்லியல்பாகிய அறம் ஆகாது என இசைக்கின்றார்; இதுதான் என்னே. எ.று.
புயல் - மழை மேகம். கடற்கரைக்கண் வானளாவிய சோலை சூழ்ந்திருத்தலால், திருவொற்றியூர் மழை வளம் சிறக்கவுடைமை தோன்றப் “புயல் சூழ் ஒற்றி” எனப்படுகிறது. புடை: ஏழனுருபின் பொருள்பட வருவது. மனைக்குப் போந்த பிச்சைத்தேவரை வரவேற்ற நங்கை, வேண்டுவது யாதென வினவுவாளாய், “என்புடைப் போந்தது என் குறித்தோ” என வினவுகின்றாள். அவளுடைய பார்வையில் அன்பு நிலவக் கண்ட அவர், “கயல் சூழ் விழியாய்” என்று அவள் கண்களைச் சிறப்பித்து, உலகில் இரப்பவர் செல்வமுடையரைச் சென்று காண்பது செல்வமுடைமை பற்றியன்றோ என்பாராய், “தனத்தவரை இரப்போர் காணல் எதற்கு” என்று கேட்கின்றார். தனத்தவர் - தனத்தை யுடையவர். கொங்கை யுடைமை பற்றித் தனத்தவரென்கின்றார் என்று கொள்ளாமல், செல்வமே கருதுகின்றார் என்று எண்ணிக் கொண்டு, இல்லாததை யுண்டென மயங்கிக் கேட்கின்றீர் என்று பொருள்படுமாறு, “மயல் சூழ் தனம் இங்கு இலை” என விடையிறுக்கின்றாள். அவள் கொங்கைகளைத் தனம் என்று சொல்லுகின்ற தனது குறிப்பையே விடாமல் கொண்டு, காண்பார்க்கு மறையாமல் தெரியுமாறு கொங்கைகள் எதிரே மார்பிடை விளங்க இருப்பதுபற்றி, “மறையாது எதிர்வைத்து இலையென்றல் அறமன்று” என்று கூறுகின்றார். இனிதின் இயல்வது பற்றி அறம் “இல்லறம்” என விதந்து கூறப்படுகிறது.
இதன்கண், என்புடைப் போந்தது என் குறித்தோ என்றாட்குத் “தனத்தவரை இரப்போர் காணல் எதற்கு” என்று தேவர் வினாவெதிர் வினாவ, தனம் உடைமை பற்றியாகும்; ஆயினும் இங்கே தனமில்லை என்றாளாக, அதனை மறையாது எதிர் வைத்து இலையென்றால் அறமன்று என உரைத்தவாறாம். (113)
|