பக்கம் எண் :

1885.

     நடவாழ் வொற்றி யுடையீர்நீர்
          நாக மணிந்த தழகென்றேன்
     மடவா யதுநீர் நாகமென
          மதியே லயன்மான் மனனடுங்க
     விடவா யுமிழும் படநாகம்
          வேண்டிற் காண்டி யென்றேயென்
     னிடவா யருகே வருகின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     கூத்தாடுவதை வாழ்க்கையாகக் கொண்டு திருவொற்றியூரைப் பதியாக வுடையவரே, நீர் பாம்பை யணிந்திருப்பது அழகாகவுளது என்று சொன்னேனாக, அவர், இளையவளே, யாம் அணிவது நீர்ப்பாம்பென நினையாதே, பிரமனும் திருமாலும் கண்டு மனம் நடுங்கியோடத் தோன்றிய விடத்தை வாயால் உமிழும் படத்தை யுடைய நல்ல பாம்பாகும்; வேண்டுமாயின் காண்பாயாக என்று சொல்லிக் கொண்டு பாம்பின் விரிந்த வாய் தோன்ற அருகே வருகின்றார்; இதுதான் என்னே? எ.று.

     நடவாழ்வு - கூத்தாடும் வாழ்க்கை. நீர் நாகம் அணிந்தது என நங்கை கூறியதை, நாகத்தைப் பாம்பின் பொதுப்பெயராகக் கொண்டு, நீர்ப்பாம்பு என அவள் மொழிந்தாளெனக் கருதி, “அதுநீர் நாகம்” என மதியேல் என்றும், நீ இளையவளாதலின் அறியாய் என்றற்கு “மடவாய்” என்றும் உரைத்து, விடநாகம் என வற்புறுத்தற்கு, “அயன்மால் மனம் நடுங்க விடம் வாயுமிழும் படநாகம்” என்றும் இயம்புகின்றார். விடநாகம் என்பதற்குப் படம் ஒன்றே காண அமையுமாயினும், விடமுடைமை தோன்ற, திறந்த வாயுடன் பாம்பு விளங்க, நங்கையின் அருகே வருவது புலப்பட “என் இடவாய் அருகே வருகின்றார்” எனவும், இளமையால் அறியாளாயினமையின், “வேண்டிற் காண்டி” என்று சொல்லிக் கொண்டு வந்தாரெனவும் அறிக. இடவாய் - விரிந்தவாய். பாம்பின் விரிந்த வாய் இனிது தோன்ற அருகே வந்தார் என்க.

     இதன்கண், நீர் நாகம் அணிந்தது அழகென்றாட்கு, அணிந்தது நீர்ப்பாம்பன்று; விடமுடைய படப்பாம்பு; வேண்டிற் காண்டி என்று பாம்பின் விரிந்த வாய் தோன்ற அருகே வருகின்றார் என்பதறிக.

     (114)