1888. மதிலொற் றியினீர் நும்மனையாண்
மலையின் குலநும் மைந்தருளோர்
புதல்வர்க் காளைப் பெருங்குலமோர்
புதல்வர்க் கிசையம் புலிக்குலமா
மெதிரற் றருள்வீர் நுங்குலமிங்
கெதுவோ வென்றேன் மனைவியருள்
ளிதுமற் றொருத்திக் கென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; உயரிய மதில்களால் சூழப்பட்ட ஒற்றிநகர்க்கண் உள்ளவரே, நும்முடைய மனைவி பிறந்தது மலையரசர் குலம்; மைந்தருள் ஒருவர் யானைக்குலமுடையவர்; ஒரு புதல்வர்க்கு அம்புலிக் குலம்; அருளுவதில் நிகரற்றவரே, உமக்கென இங்குக் குலம் வேறு உளதோ என்று வினவினேனாக, என் மனைவியருள் மற்றொருத்திக்குக் குலம் எதுவெனின் எதுவே என்று சொல்லுகின்றார்; இது தான் என்னே. எ.று.
'மதில்' எனப் பொதுப்பட மொழிந்தமையின் உயர்வமைந்த மதில் கொள்ளப்பட்டது. ஒற்றியினை யுடைவரே என்பது ஒற்றியினீர் என வந்தது. 'மனையாள்' என்றது மலையரசன் மகளாகிய உமா தேவியை மலைமகளாதல் பற்றி “நும் மனையாள் மலையின் குலம்” என மொழிகின்றாள். விநாயகரும் முருகப் பெருமானும் புதல்வர்கள்; அவர்களில் விநாயகர் ஆனைமுகம் உடையராதல் கொண்டு, “நும் மைந்தருள் ஓர் புதல்வர்க்கு ஆனைப் பெருங்குலம்” எனச் சொல்லுகின்றாள். முருகப் பெருமான் பாண்டி வேந்தர் குடியின் உக்கிரப் பெருவழுதியாய் விளங்கினமை ஏதுவாக, “ஓர் புதல்வர்க்கு இசைஅம் புலிக்குலமாகும்” என இயம்புகின்றாள். அம்புலி - சந்திரன், பாண்டியரைச் சந்திரகுலத்தவர் என்பது, சாதியின வேறுபாட்டைப் புகுத்திய பிற்காலத்தவர் வழக்கு. எதிர் - நிகர். அருள்புரிவதில் ஒப்பொருவரும் இல்லாதவர் என்றற்கு “எதிர் அருள்வீர்” என வுரைக்கின்றாள். இறுதியில் நும் குலம் எது என்று கேட்டாளாகலின், “நும் குலம் இங்கு எதுவோ என்றேன்” என்று கூறுகிறாள். எது என்னும் சொல் இடையர் குலத்தைக் குறிப்பதால், எது என்னும் இஃது என்னுடைய மற்றொருத்தியாகிய திருமாலின் குலம் என்பாராய், “என் மனைவியருள் மற்றொருத்திக்கு இது குலம்” என்று சொல்லுகின்றார். மற்றொருத்தி யென்றது தேவியாகிய திருமாலை யெனக் கொண்டு, திருமால் கண்ணனாய் யது குலத்தில் தோன்றியது பற்றி இவ்வாறு கூறினார் என அறிக. சாதி முறை வகுத்தவர் சோழரைச் சூரிய குலத்தவர் என அறிக என்றும், பாண்டியரைச் சந்திர குலத்தவரென்றும், சேரரை அக்கினி குலத்தவரென்றும் கூறினர்.
இதன்கண், நும் மனைவியருள் ஒருத்தி மலையரசர் குலம், மக்களில் விநாயகர் ஆனைக் குலம், குமரவேள் சந்திர குலம், நுமது குலம் எது என்றாட்கு, எது குலம் என் மற்றொரு மனைவியின் குலம் என மொழிகின்றார் என்பதாம். (117)
|