1890. அனஞ்சூ ழொற்றிப் பதியுடையீ
ரகில மறிய மன்றகத்தே
மனஞ்சூழ் தகரக் கால்கொண்டீர்
வனப்பா மென்றே னுலகறியத்
தனஞ்சூ ழகத்தே யணங்கேநீ
தானுந் தகரத் தலைகொண்டா
யினஞ்சூ ழழகா மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி. அன்னங்கள் சூழ்ந்து வாழ்கின்ற பொய்கைகள் நிறைந்த திருவொற்றியூரையுடைய பிச்சைத் தேவரே, உலகெலாம் அறிய, தில்லை மன்றின்கண், மனம் நினைவில் அழுந்துமாறு தகரக்கால் கொண்டிருக்கின்றீர்; அது வனப்பாகவுளது என்று சொன்னேனாக, அணங்கு போல்பவளே, மார்பின்கண் தனம் பெருகக் கொண்ட நீ தகரத் தலையை யுடையவளாயினை; பெண்ணினத்துக்கு அழகாகும் என்று சொல்லுகின்றார்; இது தான் என்னே. எ.று.
அன்னங்கள் நீர் நிலைகளிற் பூத்த தாமரையில் வாழ்வனவாதலின், “அனஞ்சூழ் ஒற்றிப்பதி” என்பதற்கு இவ்வாறு பொருள் கூறப்பட்டது. தகரக்கால், தகரின் காற்காகி ஆட்டுக்கால் ஆயிற்று. ஆட்டுக்கால், தில்லை மன்றின்கண் நிகழ்த்தும் திருக்கூத்துக்கு எடுத்த கால். உயிர்களை ஆட்கொள்ள எடுத்தருளும் சேவடியாதலால், மனத்தால் ஆழ்ந்து சிந்திக்கப்படுவதுபற்றி, அதனை “மனம் சூழ் தகரக்கால்” என்று சிறப்பிக்கின்றார். அருள்வள்ளலாகிய சிவப்பிரானுக்குரிய ஆட எடுத்த திருவடி தண்ணிய ஞான நீழல் தந்து ஆன்மாக்களை அயராவின்பம் நுகர்விப்பது அழகாதல் விளங்க, “வனப்பாம்” என உரைத்தாள். 'தகரக்கால்' என்று அவள் கூறிய சொற்றொடரில் தகரம் கூந்தலுக்கு நறுமணம் நல்கும் மயிர்ச்சாந்தைக் குறிப்பது கொண்டு, நின் மார்பகதே தனம் சூழக் கொண்டதற் கொப்ப, முடியின்கண் தகரமணிந்து தகரத் தலையினளாயினாய்; பெண்களின் குழலுக்குத் தகரச் சாந்து மணம் தந்து அழகு செய்வதென்றற்கு, “இனஞ்சூழ் அழகாம்” என்று இயம்புகின்றார். முலைகள் இரண்டும் பருத்து மார்பகம் முற்றும் கவர்ந்து இருக்குமாறுபற்றி மார்பைத் “தனஞ்சூழ் அகம்” என்கின்றார்.
இதன்கண், மன்றகத்தே தகரக்கால் கொண்டீர், 'அது வனப்பாம் என்றாட்குக் குழலிடத்தே தகரச்சாந்து கொண்டாய்; உனக்கேயன்றிப் பெண்ணினத்துக்கு அஃது அழகாம் என இசைக்கின்றார். (119)
|