1893. நல்லா ரொற்றி யுடையீர்யா
னடக்கோ வெறும்பூ வணையணைய
வல்லா லவணும் முடன்வருகோ
வணையா தவலத் துயர்துய்க்கோ
செல்லா வென்சொன் நடவாதோ
திருக்கூத் தெதுவோ வெனவிடைக
ளெல்லா நடவா தென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; நற்பண்புடையோர் வாழும் ஒற்றியூருடைய பிச்சைத் தேவரே, வெறிதாகிய மலரணையை நோக்கி யான் நடக்கவோ, அல்லது அதுநோக்கி நும்முடன் வரவோ, நும்மை யணையிற் கூடுதலின்றித் தன்மை வருத்தத்தை அடையவோ, நும்மிடத்தில் மேவா என் சொற்குறிப்பு நடவாதோ, உமது திருக்கூத்துத்தான் யாதோ எனக் கேட்டேனாக, என் கேள்விகட்கெல்லாம் ஒரு சொல்லே விடையாகுமாறு 'நடவாது' என்று சொல்லுகின்றார்; இதுதான் என்னே. எ.று.
மனம், மொழி, செயல் மூன்றிலும் நன்மையே நிலவும் பண்பாளர் நல்லார் எனப்படுவர். பண்புடைப் பெயராக்காது மகளிர்க்கே உரிய சொல்லாகக் கொள்ளலும் ஒன்று. தேவரைக் கூடி யின்புற வேண்டும் என்ற ஆசையால், பூக்கள் பரப்பிய அணைமேற் கிடக்கை எண்ணி முன்னே செல்லட்டுமா என்பாளாய், 'நடக்கோ' என்று கேட்டாட்கு, நட என்றார்; நடக்கு என்பது குற்றுரகவீற்றுத் தன்மை யொருமை வினைமுற்று. இதனைத் தொல்காப்பியம் “செய் கென் கிளவி” என்று வழங்கும். ஓகாரம் வினாப்பொருளில் வந்தது. துணையின்றித் தனித்திருக்கும் காதலர் படுக்கும் அணை, பூக்கள் பரப்பியவழியும் இன்பம் தாராமையின் “வெறும் பூவணை” என்று வெறுத்துரைக்கப் படுகிறது. அணை - ஈண்டு மலர் பெய்த படுக்கை. அவண் - படுக்கையறை. அவண் நும்மொடு வருகோ என்று கேட்டவட்கு விடை, வா என்பது; உம்மொடு அணைவதின்றி வேட்கை நோய் உற்று வருந்தவோ என்பாளாய், அணையாது அவலத்துயர் துய்க்கோ என்றாட்குத் துய்ப்பாயாக என்ற பொருளில் 'து' என்பது விடையாம்; தான் வேண்டிக் கேட்டவை அனைத்துக்கும் இசைந்த விடை எய்தாமையால் “செல்லா என்சொல் நடவாதோ” என்று கேட்க, நடவாது என விடை தரப்படுகிறது; திருக்கூத்து எதுவோ என்று முடிவாக வினவின நங்கைக்கு, எமது திருக்கூத்து காளியொடு ஆடிய வாதக்கூத்து என்பது தோன்ற நடவாது, நடனவாது என்றாராயிற்று.
இதன்கண், நடக்கோ, வருகோ, துய்க்கோ, நடவாதோ, கூத்து ஏதோ என்று எழுப்பிய வினாக்கட்கெல்லாம், நடவாது என ஒரு சொல்லால் விடை யுரைத்தவாறாம். (122)
|