பக்கம் எண் :

1896.

     இடஞ்சே ரொற்றி யுடையீர்நீ
          ரென்ன சாதி யினரென்றேன்
     தடஞ்சேர் முலையாய் நாந்திறலாண்
          சாதி நீபெண் சாதியென்றார்
     விடஞ்சேர் களத்தீர் நும்மொழிதான்
          வியப்பா மென்றே னயப்பானின்
     னிடஞ்சேர் மொழிதா னென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; செல்வம் பொருந்திய திருவொற்றியூரையுடைய பிச்சைத் தேவரே, நீர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று கேட்டேனாக, பெரிய கொங்கையையுடையவளே, நாம் வன்மை வாய்ந்த ஆண்சாதி; நீ பெண் சாதி என்று விடையிறுத்தார்; விடக்கறை பொருந்திய கழுத்தையுடைவரே 'உமது மொழி வியப்பாக இருக்கிறது' என்று நான் சொல்லவும், விருப்ப முடைமையால் நின்னிடத்தைச் சேரவுரைக்கும் சொல்தான் வியப்பாகவுளது என்று இயம்புகின்றார்; இதுதான் என்னே. எ.று.

     இடம் - செல்வத்தை யுணர்த்தும்; “இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்” (குறள். 28) என்பது காண்க. உமது சாதி யாதெனக் கேட்டமையின், யாம் ஆண் சாதி நீ பெண் சாதி என்பாராய், “நாம் திறல் ஆண் சாதி நீ பெண் சாதி” என்று உரைக்கின்றார். செயல்வன்மையுடைமை தோன்ற “திறல் ஆண் சாதி” என்றும், மனைவியாகும் இயைபுடையை நீ என்றற்கு “நீ பெண் சாதி” என்றும் எடுத்தியம்பினார். தடமுலை யென்றவிடத்துத் தடவென்னும் உரிச்சொல் பெருமை குறிப்பது. கொங்கை பருத்தமையின் ஒருவற்கு பெண்சாதியாய்ச் சிறக்கும தகுதி யுடையளாயினை என்பாராய், “தடஞ்சேர் முலையாய்” எனக் கூறுகின்றார். கொங்கை பெருத்தமைகொண்டு நீவிர் இவ்வாறு கூறுவது வியப்பைத் தருகிறதென்பாளாய், “நும் மொழிதான் வியப்பாம்” என மொழிந்தாள். பிச்சைத் தேவரது மொழியின்கண் களியாட்டுக் குறிப்புண்மை கண்டு உரையாடுதலால் “விடஞ்சேர் களத்தீர்” என்று இயம்பினாள். விடம் - நஞ்சு; களம் - கழுத்து. உரையாடுபவரைத் தம்மைக் காதலாற் சேரக் குறிக்கும் நயப்புத் தன்மை அவள் சொல்லின்கண் இருப்பதை வெளிப்படுத்துவாராய், “நின் இடம் சேர் மொழிதான் நயப்பால் வியப்பு உண்டாக்குகிறது” என விளம்புகின்றார்.

     இதன்கண், நீர் என்ன சாதியினர் என்றாட்கு நாம் ஆண்சாதி, நீ பெண்சாதி என்று தேவர் விடை கூறுவதும், அவள் அதுகேட்டு, நும் மொழி வியப்பாம் என்றாளாக, நயப்பால் நின்னிடம் சேர் மொழிதான் வியப்பாகவுளது என்று கூறுவதும் காட்டியவாறாம்.

     (125)