1897. உடையா ரென்பா ருமையொற்றி
யுடையீர் பணந்தா னுடையீரோ
நடையா யேற்கின் றீரென்றே
னங்காய் நின்போ லொருபணத்தைக்
கடையா ரெனக்கீழ் வைத்தருமை
காட்டேம் பணிகொள் பணங்கோடி
யிடையா துடையே மென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; திருவொற்றியூரை உடைய தேவரே, உம்மை உடையார் எனச் சான்றோர் உரைக்கின்றார்கள்; நீர் பணம் மிகவுடையரோ; உடையரல்லர்போல் காலால் நடந்துசென்று பலி ஏற்கின்றீரே என்று வினவினேனாக, நங்கையே, உன்னைப்போல் ஒருபணமேயுடைமை கொண்டு கடையவர்போலக் கீழே மறைத்து வைத்து அருமை செய்யேம்; குறைவின்றியுடையேம்; பணியாக வேண்டினும் கொள்; பணமாக வேண்டினும் பெற்றுக்கொள்க என இசைக்கின்றார்; இதுதான் என்னேடி. எ.று.
உலகில் உள்ள உயிரனைத்தும் இறைவனுக்கு அடிமையென்றும், பொருளனைத்தும் அவனது உடைமை யென்றும், அறிவு நூல்கள் கூறுகின்றன; இங்ஙனம் இருவகைப் பொருள்களையும் அடிமையாகவும் உடைமையாகவும் வுடையவனாதல் பற்றி, இறைவனை “உடையார்” என்பதோர் மரபாயிற்று; “உடையானே உனையல்லால் உறுதுணை மற்றறியனே” (திருப்புலம்பல்) என மணிவாசகனார் உரைப்பது காண்க. பணத்தால் எல்லாப் பொருளும் இனிதின் எளிதிற் பெறப்படுதலால் பணம் உடையாரை “உடையார்” என உலகத்தார் உரைக்கின்றார்கள். உலகநடையே மேற்கொண்டு உம்மை உடையார் என்பாராயின், நீர் பணம் மிகவுடையவர் போலும்; அவ்வாறாயின் நீர் மனைதோறும் நடந்து சென்று இரப்பது கூடாதே என்பாளாய், “பணந்தான் உடையீரோ, நடையாய் ஏற்கின்றீர்” என்று பலியிடும் நங்கை வினவுகின்றாள். அவட்கு அவர், நீ ஒரு பணத்தைக் கொண்டு கீழ்மக்கள் போல கீழ்ப் புதைந்து மறைத்து அருமை செய்கின்றாய் என்பாராய், “நங்காய் நின்போல் ஒரு பணத்தைக் கடையர் எனக் கீழ் வைத்து அருமை காட்டேம்” என்று கூறுகின்றார். பணம், பெண்களின் அல்குலுக்கும் பாம்பின் படத்துக்கும் பெயராம். அல்குலாகிய பணம் என்று கொண்டு, ஒரு பணமாகிய அல்குலை இடைக்கீழ் மறைத்து வைத்து அருமை செய்கின்றாய் என உரைப்பதுமுண்டு. யாம் நிறைய வுடையேம். அணி இழைகளாக வேண்டின் பெற்றுக் கொள் என்பாராய், “இடையாது உடையேம் பணிகொள்” என்றும், பணமாக வேண்டினும் கொள்க என்றற்குப் “பணம் கோடி” என்றும் கூறினாராம். “பணி கொள் பணம் கோடி இடையாதுடையேம்” என்றதற்குப் பாம்பினிடத்தே கொள்ளப்படும் மணிகள் கோடிக்கணக்கில் குறையாமல் உடையேம் எனவும், பிறவாறும் பொருள் கொள்ளப்படும். கோடி - கொள்க எனும் பொருட்டு.
இதன்கண், பணம் உடையீரோ, நடையாய் ஏற்கின்றீரே என்றாட்கு நின்போல் ஒரு பணத்தைக் கீழ்வைத்து அருமை காட்டேம்; இடையா துடையேம், பணிகொள், பணம் கோடி என விடையிறுத்தவாறாம். (126)
|