பக்கம் எண் :

1899.

     பெருந்தா ரணியோர் புகழொற்றிப்
          பெருமா னிவர்தம் முகநோக்கி
     யிருந்தா வமுத மனையீரிங்
          கடுத்த பரிசே தறையுமென்றேன்
     வருந்தா திங்கே யருந்தமுத
          மனையா ளாக வாழ்வினொடு
     மிருந்தா யடைந்தே மென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; பெரிய நிலவுலகத்தில் உள்ளவர்கள் புகழ்கின்ற திருவொற்றியூரிலுள்ள பெருமானாகிய இவருடைய முகத்தை நோக்கி ஆராவமுதம் போன்ற நீவிர் இங்கு வந்த காரணம் யாதாம் உரைப்பீராக என்று கேட்டேனாக, இங்கே ஒரு வருத்தமும் இன்றி அருந்துகிற அமுதம் அளிக்கும் மனையவளாகச் செல்வ வாழ்வோடு நீ இருந்தது கண்டு வந்தடைந்தேம் என்கின்றார்; இதுதான் என்னே. எ.று.

     தாரணி - நிலவுலகம். இதற்குப் பெருமை அகலமும், பெருமலைகளையும் கடல்களையும் எண்ணிறந்த உயிர்களையும் தாங்குதல் உடைமையும். வந்த விருந்தை முகமலர்ந்து நோக்கி ஓம்புதல் மனையற மாதலால், “முக நோக்கி” என்றும், முகப்பொலிவும் அகக் குறிப்பும் அமுதமுண்டார் எய்தும் இன்பத்தைத் தனக்கு நல்கினமை தோன்ற, “அருந்தா அமுதம் அனையீர்” என்றும், சொல்கின்றாள். காட்சி மாத்திரையிலே அமுதமுண்ட வழிபிறக்கும் இன்பம் சுரந்தமையின் “அருந்தா அமுதம்” என்பாளாயினள். முகம் நோக்கினபோதே வந்த குறிப்பு இனிது தோன்றவும் “இங்கு அடுத்த பரிசு ஏது” என்றும், “அறையும்” என்றும் கேட்பது மிகை. மிகை மொழிகள் நங்கையின் மனத்தில் தோன்றி நிலவும் காமக் காதற்குறிப்பைத் தேவர் அறியப் புலப்படுத்தின. அவள் மனத்தை மகிழ்விக்கும் குறிப்பும் புலப்பட, “இங்கே வருந்தாது அருந்தமுத மனையாளாக வாழ்வினொடும் இருந்தாய் அடைந்தேம்” என உரைக்கின்றார். வாய் திறந்து கேட்டும் சிறு வருத்தமும் இன்றி உண்பலி பெறலாம் என்பது விளங்க “வருந்தாது” என்றும், கண்ணுக்கும் கருத்துக்கும் வாய்க்கும் ஒப்பச் சுவையுடைய விருந்து செய்பவளாக விளங்குகின்றமை கண்டு வந்தேம் என்ற பொருள்பட, “அருந்தமுத மனையாளாக இங்கே வாழ்வினொடும் இருந்தாய்”; அதனால் “அடைந்தேம்” என்றும் உரைக்கின்றார். இங்கே நீ உண்ணப்படும் அமுதம் நிறைந்த மனைக்குரியவளாக எனவும், அமுதம் போன்றவளாக எனவும் இருபொருள்பட “அருந்தமுத மனையாளாக” என்பது அமைந்திருப்பது காண்க. அருந்தமுதம் போன்றவள் என்றது கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலன்களாலும் நுகர்தற் கமைந்தவள் என உணர்த்துவதறிக. வாழ்வு - செல்வக் குறைவின்மை.

     இதன்கண், அருந்தா அமுத மனையீர் வந்த பரிசு ஏது என்றாட்கு, அருந்தமுதம் அனையாளாக இருந்தாய் அடைந்தேம் என விடை கூறியவாறறிக.

     (128)