பக்கம் எண் :

190.

    எளியே னினது திருவருளுக்
        கெதிர் நோக்குற்றே யிரங்குகின்ற
    களியே னெனைநீ கைவிட்டால்
        கருணைக் கியல்போ கற்பகமே
    அளியே தணிகை யருட் சுடரே
        அடிய ருறவே யருள் ஞானத்
    துளியே யமையு மெனக் கெந்தாய்
        வாவென் றொருசொல் சொல்லாயே.

உரை:

     திருத்தணிகையில் எழுந்தருளி விளங்குகின்ற அருட் சுடர் விளக்கே, அடியவர்க்குற்ற உறவினனே, கற்பகமாய் உதவுபவனே, அளித்தஞ்சல் என்னும் அன்பே, எளியவனாகிய யான் நினது திருவருட் பேற்றை எதிர் நோக்கி இங்கே யிருந்து இரங்கலுற்று மயங்குகின்றேன்; என்னை இரக்கமின்றிக் கைவிடுவாயாயின் அது நின் கருணைப் பண்புக்கு ஒவ்வாதாகும்; உனது திருவருளாகிய ஞான வமுதத்தில் ஒரு துளியே நல்கினும் அஃது எனக்குப் போதியதாம்; தருவேம் வருக என்று ஒரு சொல் சொல்லுக, எ. று.

     திருவருள் ஞான வொளியே திருமேனியாக வுடையவனாதலால் “தணிகை அருட் சுடரே” என்றும், அடியார்க் குறுவன அனைத்தும் தமக்கு உறுவதாகக் கொண்டு ஆவன செய்வது பற்றி “அடியர் உறவே” என்றும், வேண்டுவன வேண்டியாங்கு உதவுதலாற் “கற்பகமே” என்றும், அருள் கனிந்திருப்பது கொண்டு “அளியே” என்றும் கூறுகின்றார். இரந்து நின்றல்லது பெறலாகா மென்மை யுடைமை பற்றி “எளியேன் நினது திருவருளுக்கு எதிர் நோக்குற்றே இரங்குகின்றேன” என உரைக்கின்றார். திருவருள் வரவை எதிர்பார்த் திருக்கின்றமையால், இரக்கமும் மயக்கமும் எய்துமாறு புலப்பட, “எதிர் நோக்குற்றே இரங்குகின்ற களியேன்” என்று புகல்கின்றார். களிப்பு - மயக்கம். ஞானத் தெளிவன்றி மனமயக்கம் போக்குவது வேறில்லையாதலின் “அருள் ஞானத் துளியே யமையும்” எனவும், தருவேம் வருக என்றோர் இனிய சொல்லை வழங்கி யருள்க என வேண்டுபவர், “வாவென்றொரு சொல் சொல்லாய்” எனவும் இயம்புகின்றார்.

     இதனால் அருள் ஞானம் தருவேம் வருக என்று ஒரு சொல் சொல்லுக என வேண்டியவாறு.

     (10)