192. நன்மைய வெல்லா மளித்திடும் உனது
நளினமா மலரடி வழுத்தாப்
புன்மைய ரிடத்திவ் வடியனேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
சின்மயப் பொருணின் தொண்டர்பால் நாயேன்
சேர்ந்திடத் திருவருள் புரியாய்
தருமயக் கற்றோர்க் கருடரும் பொருளே
தணிகை வாழ் சரவண பவனே.
உரை: தற்போதம் என்னும் மயக்க மொழிந்த சான்றோர்க்கு அருள் வழங்கும் பரம் பொருளாகிய தணிகைச் சரவண பவனே, நன்மையாவன எல்லாவற்றையும் நல்குகிற உனது தாமரை போலும் திருவடியை வணங்காத புல்லரிடத்தில் இவ்வடியனாகிய யான் ஒன்று வேண்டியடைவது மிக்க மன நோயைத் தருவதால் யான் அதனைப் பொறுக்க மாட்டேனாகின்றேன்; ஆதலால் ஞான மயமான நன்பொருளாகிய நின்னுடைய அடியவரிடமே யான் சேர்தற்குத் திருவருள் பாலிக்க வேண்டுகிறேன், எ. று.
தன் மயக்கு தற்போதமாகிய மயக்கம்; இதனை யான் என தென்னும் செருக்கு என்றும், பசுபோதம் என்றும் அறிஞர் வழங்குவர். தற்போதம் மலப் பிணிப்பை மிகுவித்துத் திருவருள் நெறிக்கும் புறம்பாக்குதலால், “தன்மயக் கற்றோர்க்கு அருள் தரும் பொருளே” என்று கூறுகின்றார். நளினம் - தாமரை. திருவடியை நினைந்து தொழாதார் கீழ்மை யுறுதலால,் “மலரடி வழுத்தாப் புன்மையர்” எனவும், அவர்பாற் செல்லுதல் கீழ்மை யுறுவித்தலால், “அடியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன்” எனவும் புகல்கின்றார். புன்மையர் தரும் பொருளும் அவரது புன்மையாற் புல்லிதாம் என்பது கருத்து. சின்மயம் - ஞானமயம். ஞானமாகிய செம்பொருட்கு உறைவிட மாகியவர் தொண்டராதலால் அவரிடம் ஒன்று வேண்டிப் பெறுவது திருவருட் பேறா மென்பாராய்ச் “சின்மயப் பொருள் நின் தொண்டர்பால் நாயேன் சேர்ந்திடத் திருவருள் புரியாய்” என வுரைக்கின்றார்.
இதனால் திருவடி தொழாத புல்லர்பாற் செல்லாமல் நல்ல ஞானிகள் பால் ஒன்று வேண்டிச் செல்ல அருளுக என்பதாம். (2)
|