பக்கம் எண் :

1928.

     பொன்னேர் மணிமன் றுடையீர்நீர்
          புரிந்த தெதுவெம் புடையென்றே
     னின்னே யுரைத்தற் கஞ்சுதுமென்
          றாரென் னென்றே னியம்புதுமேன்
     மின்னே நினது நடைப்பகையா
          மிருகம் பறவை தமைக்குறிக்கு
     மென்னே யுரைப்ப தென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; பொன் வேய்ந்த அழகிய மன்றினை யுடைய பெருமானே, நீவிர் எம்மிடத்து விரும்பி வந்தது யாது என்று கேட்டேனாக, இப்பொழுது இங்கே அதனை யுரைப்பதற்கு அஞ்சுகின்றேம் என்றார்; என்னவாம் அது என்று யான் வற்புறுத்திக் கேட்கவும், சொல்லுவேம்; மின்போன்ற இடையுடையவளே, உன்னுடைய நடைக்கு ஒவ்வாமற் பகையாகும் விலங்கையும் பறவையையும் குறிக்கும் சொற்களே யாம்; வேறே உரைப்பது என் என்று இயம்புகின்றார்; இதுதான் என்னே. எ.று.

     பொன்னேர் மன்று - பொன்னாலாகி மன்று; பொற் சபை. மணி: ஈண்டு அழகின் மேற்று. மணிமன்று எனக் கொண்டு இரத்தின சபை என்றலும் ஒன்று. பொன்னேர் மனிமன்றுடையீர் என்றதற்குப், பொற் சபையும் இரத்தினசபையும் உடையீர் என்று உரைப்பதும் உண்டு. புரிதல் - விரும்புதல். இப்பொழுது, இங்கே என்று இருபொருள் அமைய 'இன்னே' என நிற்பதறிக. இரந்து பேணுதற்கேற்ற செவ்வி தெளியப் புலப்படாமையால் கேட்டற்கு அஞ்சுகின்றேம் என்பாராய், “உரைத்தற்கு அஞ்சுதும்” என்று கூறுகிறார். அஞ்ச வேண்டா, வேண்டுவதை விளம்பலாம், தருவேம் என்று உறுதி மொழிவாளாய், “என் என்றேன்” என்று சொல்லவும், “மேலே சொல்லுகிறோம், கேள்” என்பாராய் “மேல் இயம்புதும்” என உரைக்கலுறுகின்றார். மின்னற் கொடிபோல் தோன்றி மறைவது பற்றி நுண்ணிய இடையுடைய இளமகளிரை “மின்னே” என்பது கவிமரபு. நடைப் பகையாம் மிருகம் - பிடியானை. பறவை - அன்னம் யாம் நின்பால் விரும்பி வந்தது பிடியன்னம் என்றற்கு, “நின்பால் வந்தது, நினது நடைப் பகையாம் மிருகம் பறவை தமைக் குறிக்கும்” என்றும், இதன்மேல் உரைத்தற்கொன்றும் இல்லை என்பாராய், “என்னே உரைப்பது” என்றும் கூறுகின்றார்.

     இதன்கண், எம்புடை நீர் புரிந்து வந்தது எது என்றாட்கு, இன்னே உரைத்தற்கு அஞ்சுதும் என்றார்; என்றவரை “என்” என்றுகேட்டாளாக, “மேல் இயம்புதும்” என்று முன் மொழிந்து, யாம் நின்பால் புரிந்தது நடைப்பகையாம் மிருகம் பறவை தமைக்குறிக்கும் என்னே உரைப்பது” என மொழிகின்றார் என்றாராயிற்று.

     (157)