1933. தெவ்வூர் பொடிக்குஞ் சிறுநகையித்
தேவர் தமைநா னீரிருத்த
லெவ்வூ ரென்றே னகைத்தணங்கே
யேழூர் நாலூ ரென்றார்பின்
னவ்வூர்த் தொகையி னிருத்தலரி
தாமென் றேன்மற் றதிலொவ்வூ
ரிவ்வூ ரெடுத்தா யென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ.
உரை: ஏடீ, சேடி; பகைவரது ஊரை எரித்துச் சாம்பராக்கும் குறுநகையையுடைய இத்தேவரை நோக்கி, நீவிர் இருந்தது எவ்வூர் என்று கேட்டேனாக, நகைசெய்து, அணங்காகிய பெண்ணே, யாம் இருக்கும் ஊர் ஏழூரும் நாலூருமாம் என்றார். அது கேட்டதும் யான் இவை மூவர்களின் பாடல்பெற்ற ஊர்த் தொகைகளில் காணாமையால், இவை அவ்வூர்த் தொகையில் இல்லையே என்றேன். அவர், மற்றதான வைப்புத்தலத் தொகையில் எமக்கு ஒத்த வூர்களாக இவ்வூர்களை எடுத்தறிவாயாக என்று இசைக்கின்றார். இதுதான் என்னே. எ.று.
தெவ்வர் ஊர், தெவ்வூர் என வருகிறது. தெவ்வர் - பகைவர்; ஈண்டு திரிபுரத் தசுரர். திரிபுரத்தைக் கண்களால் நோக்கிக் குறுநகை செய்த மாத்திரத்தே எரிந்து சாம்பரானது பற்றி, “தெவ்வூர் பொடிக்கும் சிறுநகை” என்று சிறப்பிக்கின்றார். சிவனுடைய குறுநகையால் புரம் எரிந்து பொடியான வரலாற்றைக் காஞ்சிப் புராணத்துட் காண்க. இத்தேவர் என்றது, பிச்சைத்தேவரை. இருந்ததென இறந்த காலத்தாற் கூறியது காலம் பற்றியன்று, வற்புறுத்தற் பொருட்டென்க. அணங்கு போல்வாளை அணங்கு என்கிறார். இருத்தல் அரிதாம் என்றவிடத்து, அருமை இன்மை குறித்தலின் “இல்லையாம்” என உணர்க. அவ்வூர்த் தொகை என்றது, ஞானசம்பந்தர் முதலியோர்களின் பாடல் பெற்ற ஊர்களின் தொகை. அதன்கண் ஏழூர் போல நாலூர் காணப்படவில்லை. ஆதலால் அவற்றை வைப்புத்தலத் தொகையில் எடுத்து ஆராய்க என்பாராய், “இவ்வூர் எடுத்து ஆய்” என்று பணிக்கின்றார்.
இதன்கண், இருந்தது எவ்வூர் என்றாட்கு ஏழூர், நாலூர் என்றாராக, இவை இரண்டும் சேர ஞானசம்பந்தர் முதலியோர் பாடிய ஊர்த்தொகையில் இல்லை என்றபோது, மற்றதில் உண்டு, எடுத்து ஆய்க என இசைக்கின்றார் ஆயிற்று. (162)
|