பக்கம் எண் :

1936.

     ஓங்குஞ் சடையீர் நெல்வாயி
          லுடையே மென்றீ ருடையீரேற்
     றாங்கும் புகழ்நும் மிடைச்சிறுமைச்
          சார்ந்த தெவனீர் சாற்றுமென்றே
     னேங்கும் படிநும் மிடைச்சிறுமை
          யெய்திற் றலதீண் டெமக்கின்றா
     லீங்குங் காண்டி ரென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடீ, சேடி; நீண்டுயர்ந்த சடையை யுடைய தேவரே, நீர் நெல்வாயிலை எமக்கு ஊராகவுடையேம் என்று மொழிகின்றீர்; அஃது ஆயின் தாங்கப்படுகின்ற புகழானது உம்மிடத்து நில்லாது சிறுமை யடைந்தது ஏன்? நீரே கூறுமின் என்று கேட்டேனாக, காதலர் கண்டு இரங்கும்படியாக நும்முடைய இடைக்குச் சிறுமை எய்தியுளதே யன்றி எமக்கு இல்லை; இங்கே எம்மையே கண்டு கொள்க என்று கூறுகின்றார்; இதுதான் என்னே. எ.று.

     நெடிது நீண்டு உயர்ந்த சடை என்பது தோன்ற “ஓங்கும் சடை” எனச் சிறப்பிக்கபடுகிறது. நெல் வாயில், திருமுறைப் பாடல்களால் சிறப்பிக்கப்பட்ட ஊர்களில் ஒன்று. நெல்வயல்களை முற்றத்தே யுடைய ஊர் என்பது பொருள். இத்தகைய வளவிய ஊரையுடையவர், சிறுமையடைந்து பலி வேண்டி உழல வேண்டா; புகழ் ஈவார்மேல் நிற்பதன்றி இரப்பார் மேல் நின்பதன்று; பலிவேண்டி இரத்தலை மேற் கொண்டதனால் உமக்குப் பொருட் சிறுமையும், புகழ்க்கும் உமக்கு ஈவார்மேற் செல்ல வேண்டிய சிறுமையும் எய்தச் செய்தது என்னை என்பாள் போலத் “தாங்கும் புகழ் நும்மிடைச் சிறுமை சார்ந்தது எவன் நீர் சாற்றும்” என உரைக்கின்றாள். இளமகளிர்க்கு இடை சிறுத்தல் இயல்பாயினும் அவர்களைக் காதலிப்பவர் உள்ளத்தில் இடைச் சிறுமை வருத்தம் விளைவிப்பது பற்றி, “ஏங்கும் படி நும் இடைச் சிறுமை எய்திற்” றென்றும், எமக்கு அஃது இல்லை என்பார், “ஈண்டு எமக்கு இன்றாம்” என்றும், உண்மை யறிய வேண்டின் “இங்கே நேரே காண்க” என்பார், “ஈங்கும் காண்டி” என்றும் உரைக்கின்றார்.

     இதன்கண், நெல்வாயில் உடையீராயின் நும்மிடைச் சிறுமை சார்ந்தது எவன் என வினாவிட்கு, நும் இடை சிறுமை எய்திற்று; அலது ஈண்டு எமக்கு இன்று; ஈங்கும் காண்டி எனத் தேவர் விடை கூறுகின்றாராம்.

     (165)