பக்கம் எண் :

99. கண்ணிறைந்த கணவன்

திருவொற்றியூர்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1937.

     மைய லழகீ ரூரொற்றி
          வைத்தீ ருளவோ மனையென்றேன்
     கையி னிறைந்த தனத்தினுந்தங்
          கண்ணி னிறைந்த கணவனையே
     மெய்யின் விழைவா ரொருமனையோ
          விளம்பின் மனையும் மிகப்பலவாம்
     எய்யி லிடையா யென்கின்றா
          ரிதுதான் சேடி யென்னேடீ.

உரை:

     ஏடி, சேடி; பிச்சைக்கு வந்த பெருமானிடம், காண்பார் யாவரும் இச்சை கொள்ளும் பேரழகினை உடையவரே, நிர்தாம் நும் ஊரையும் ஒற்றி வைத்துவிட்டீரே, உமக்கொரு மனைதானும் இருந்து வாழ்தற்கு வேறு உளதோ என்றேனாக, அதற்கு அவர், 'கையில் நிறைந்த செல்வம் உடையானைக் காட்டிலும், கண்ணுக்கு நிறைந்த எழிலுள்ளானான ஒரு கணவனையே பெண்கள், மெய்யாகவே விரும்புவார்கள் அல்லரோ; மேலும், எய்த்து இல்லையாம்படியாக மெலிவுற்று விளங்கும் இடையினை உடையாளே, எனக்கு ஒற்றியூரிலுள்ள ஒரு மனைதானோ, சொல்வதென்றால், மிகப் பலவான மனைகள் உலகிலுள்ளன; அறிவாயாக என்கின்றார்; இதுதான் என்னேடீ. எ.று.

     இறைவனுக்குச் 'சுந்தரன்' என்பதும் ஒரு பெயராதல் நினைவாள், 'மையல் அழகீர்' என்று பெருமானை விளிக்கின்றாள். ஒற்றியில் உறைவீர் எனவும், இடத்தை ஒற்றி வைத்துவிட்டீர் எனவும் இரு பொருள்பட 'ஒற்றிவைத்தீர்' என்று கூறுவாள், உம் விருப்புக்கு இசைவாக நான் உம்மை மணப்பினும், உம்மோடுகூடி இல்லறம் இயற்றுதற்கு ஒரு மனையேனும் உமக்கு உளதாமோ?' என்று மறுக்கின்றாள். அதற்கு அவர், கையிருப்பிலே பெருந்தனம் உடையானைவிடக் கண்பார்வைக்கு அழகானவனையே மகளிர் விரும்புவரென்னும் உண்மை இயல்பைக் கூறி, அவளைத் தெளிவிப்பதுடன், 'எய் இல் இடையாய்' என அவள் இடையின் அழகையுப் வியந்து பாராட்டி, 'இந்த ஒரு மனைதானோ எமக்கு, சொல்வதாயின் எமக்குள்ள மனைகளோ மிகப் பலவாம்' என்றும் தெளிவிக்கின்றார். இதனை, எமக்கு ஒரு மனைவிதானோ, சொல்லப்போனால் மிகப் பலவான மனைவியர் உள்ளனர் என்று அவர் கூறியதாகக் கொண்டு மயங்குபவள், தோழியிடம், 'என்னே இவர் பேச்சு' எனக் கேட்கின்றாள்.

     இதன்கண், ஒரு மனையும் உளதோ என்று வினவினாளுக்கு, மிகப் பலவாம் மனையுளோம் என்றாராக, மனையை மனைவியர் என மயங்கினாள், தன், தோழிக்குச் சொல்லி வினாவுகின்றனளாம்.

     இச் செய்யுளும், இங்கித மாலையின் 1873 ஆம் செய்யுளும், தம் முள்ளே பெரும்பாலும் ஒத்திருப்பதனையும் காண்க.

     (1)