பக்கம் எண் :

101. இராமநாமப் பதிகம்

    அஃதாவது இராமபிரானுடைய திருப்பெயரை ஓதி யின்புறுவது பொருளாக நிற்கும் பாட்டுக்கள் பத்துக் கொண்ட சொன்மாலையாம். இதன்கண் மண்ணக வாழ்வில் உண்டாகும் துன்பங்கள் வாழ்வாரைத் தொடர்ந்து போந்து வருத்துவனவாதலால், அவற்றால் பிறக்கும் மனச் சோர்வைப் போக்கியருள வேண்டும் என்ற கருத்தால் இராம்பிரானை வழிபடு திறம் காணப்படுகிறது. வடலூர் வள்ளல் சுத்த சிவ நெறிச் செம்மலாதலின் திருமாலாகிய இராமபிரானைச் சொன்மாலையால் வணங்கி வழிபடுகிறார். “பாம்பணைப் பள்ளியானை பழிமொழி பகர்ந்த பாவி கோம்பியாய் உதரவங்கி கொளுத்திட அழிவன்” எனச் சிவதரு மோத்திரம் கூறுதலின், இராமனை வழிபடுவது சைவத்துக்கு மாறாகாமை யுணரப்படும். இராமபிரான் சிவவழிபாடு செய்யும் 'சீரியோனாதலால், அவனை வழிபடுவது சிவத்தை வழிபடுவதேயாம். சிவநெறி யுண்மை யறியாதார் மாறுபடப் பேசுவர்; உண்மை தெரியுங்கால் அவரும் தெளிவர். இப் பதிகம் கொந்தமூர் சீனிவாச வரதாசாரிய சுவாமிகள் பொருட்டு வடலூர் வள்ளல் பாடினார் என ஆராய்ச்சியாளர் குறிக்கின்றனர்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1939.

     திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச்
          செழுங்கனியே கொழும்பாகே தேனே தெய்வத்
     தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித்
          தனுஎடுத்த ஒருமுதலே தருமப் பேறே
     இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத்
          தென்அரசே என்அமுதே என்தா யேநின்
     மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ
          மனந்தளர்ந்தேன் அறிந்தும்அருள் வழங்கி லாயே.

உரை:

     திருமகளாகிய பெருமாட்டி, உவந்து நுகரும் செழுமையான கனி போன்றவனே, கொழுவிய பாகே, தேனே, கற்பகச் சோலையிலிருக்கும் இந்திரனைக் காத்தற்பொருட்டு வெற்றியையுடைய வில்லைக் கையிலேந்திய தனிமுதல்வனே, அறக் கடவுள் பெற்ற செல்வமே, இம்மை மறுமை இரண்டிலும் என் மனத்தின்கண் எழுந்தருளும் இராம என்னும் பெயரையுடைய என் அரசே, எனக்கு அமுதமானவனே, என்னுடைய தாயே, உன்னுடைய மணம் பொருந்திய தாமரை மலர் போன்ற அழகிய திருவடியை வாழ்த்தி வணங்கும் சிறியவனான யான் மனத்தே சோர்வுடையனாகின்றேன்; இதனை அறிந்தும் திருவருள் செய்கின்றாய் இல்லையே; என் செய்வேன். எ.று.

     திருமாலுக்குப் போக காரிகையாதலின், திருமகளை முதற்கண் எடுத்துப் பதிகத்தில் குறிக்கின்றார். பிரானுக்குப் பெண்பால் பிராட்டியாயினும், தமக்குள்ள தொடர்பு காட்டற்கு “எம்பிராட்டி” என்றும், “பிராட்டி மகிழும் வண்ணச் செழுங்கனி” எனவும் புகழ்கின்றார். கருமை வண்ணமும் மிக்க சுவையும் உள்ளமை விளங்க “வண்ணச் செழுங்கனியே” என்று கூறுகிறார். கனிக்குச் செழுமையும் பாகிற்குக் கொழுமையும் சிறப்பாதலால், “செழுங்கனியே கொழும்பாகே” என்று சிறப்பிக்கின்றார். தெய்வத் தரு - தேவருலகத்துக் கற்பக மரம். கற்பகச் சோலையில் வீற்றிருந்து தேவர்களைப் புரப்பவனாதலால், இந்திரனைத் “தெய்வத் தரு மகன்” என்று உரைக்கின்றார். வென்றித் தனு - வெற்றி கொள்வதையே குறிக்கொண்ட கொதண்டமென்னும் வில். தனி நின்று வெற்றி கொள்ளும் தகையால் முதல்வ னென்றற்கு “ஒருமுதலே” என இயம்புகிறார். அறக் கடவுட்குக் கிடைத்த அரிய செல்வம் போறலின், இராமனை, “தருமப் பேறு” எனச் சாற்றுகிறார். “அறம் வளர்க்கும் கண்ணாளன்” (யுத்த) எனக் கம்பர் குறிக்கின்றார். இனி, “புண்ணியத்தின் பயன்” என்றலுமுண்டு. தெய்வப் பிறப்பும் மக்கட் பிறவி போல நிலையில்லதாதலால், இறைவன் ஆங்கும் உள்ளத் தமர்தல் இன்றியமையாமை புலப்பட, “இருமையும் என் உளத்தமர்ந்த இராமநாமத்து என்னரசே” என இசைக்கின்றார். மருமலர் - மணம் பொருந்திய பூ. மலர் - தாமரை மலர். பொன் - அழகு. வழுத்துதல் - பெயரைச் சொல்லி வணங்குவது. மனத் தளர்ச்சி செயலறவை யுண்டாக்கிக் கீழ்மைப் படுத்துவதாதலால் “மனம் தளர்ந்தேன்” எனவும், அதனை யறிந்துவைத்தும் போக்கி யருளாமையை எடுத்தோதியும் முறையிடுகின்றார்.

     இதனால், மனத்தளர்ச்சி போக்கி யருள வேண்டியவாறாம்.

     (1)