194. நிலையரு ணினது மலரடிக் கன்பு
நிகழ்ந்திட நாடொறு நினையாப்
புலையர்தம் மிடமிப் புன்மையேன் புகுதல்
பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய்
மலையர சளித்த மரகதக் கொம்பர்
வருந்தி யீன்றெடுத்த மாமணியே
தலையர சளிக்க இந்திரன் புகழும்
தணிகை வாழ் சரவண பவனே.
உரை: தலையாய அரச பதம் நல்குமாறு வேண்டி இந்திரன் புகழ்கின்ற தணிகைச் சரவண பவனே, மலையரசன் பெற்ற மகளாகிய மரகதக் கொம்பு போன்ற உமாதேவியார் வருந்திப் பெற்ற அழகிய மாணிக்க மணி போல்பவனே, நிலைத்த திருவருள் நிலையமாகிய உன்னுடைய தாமரை போன்ற திருவடிக்கண் அன்புண்டாமாறு நாளும் நினைந்து தொழாத புலை மக்களை யடைந்து கீழவனாகிய யான் ஒன்று வேண்டிச் சென்று துன்புறுவதைச் சிறிதும் பொறுக்க மாட்டேன், காண், எ. று.
நிலவுலகத்து அரசினும் தேவருலகத்து அரசு தலைமையும் மெருமையும் உடையதாகலின் அதனைப் பெறுவது குறித்து இந்திரன் முருகப் பெருமானைப் புகழ்ந்தேத்துவது விளங்கத் “தலையரசளிக்க இந்திரன் புகழும் சரவணபவனே” எனப் புகல்கின்றார். தணிகை-திருத்தணிகை மலை. மலையரசு - இமவான். பச்சை நிறமும் பூங்கொம்பு போன்ற திருவுருவும் உடைமை பற்றி உமாதேவியை, “மரகதக் கொம்பர்” என்றும், தேவர்க ளுற்ற துன்பம் கண்டு மனம் வருந்தி முருகப் பெருமானைப் பயந்தெடுத்தமை தோன்ற, “வருந்தி யீன்றெடுத்த மாமணியே” என்றும் போற்றுகின்றார். என்றும் குறைவதும் நிறைவதுமின்றி நிலையாய் விளங்குமாறு பற்றித் திருவருளை “நிலையருள்” எனவும், அதனை வழங்கும் திருவடிகளை, “நினது மலரடி” எனவும், அவற்பை நினைந்து வழிபடுவது கடமையாக இருக்க, அது செய்யாத கீழ் மக்களை “அன்பு நிகழ்ந்திட நாடொறும் நினையாப் புலையர்” எனவும், அவரை யடைபவர் வஞ்சிக்கப்பட்டுத் துன்புறுவது பற்றிப் “புலையர் தம்மிடம் இப்புன்மையேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன்” எனவும் இயம்புகின்றார். நல்லோர் புகுதல் இல்லாமையால், புகும் தம்மை “இப்புன்மையேன்” என நொந்து இகழ்கின்றார்.
இதனால் முருகன் திருவடியை நாளும் நினையாத புலையர்பாற் செல்லாமை யருளுக என வேண்டியவாறாம். (4)
|