பக்கம் எண் :

1940.

     கலைக்கடலே கருணையெடுங் கடலே கானங்
          கடந்ததடங் கடலேஎன் கருத்தே ஞான
     மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர்
          மனத்தொளிரும் சுயஞ்சுடரே மணியே வானோர்
     தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத்
          தசரதன்தன் குலமணியே தமியேன் உள்ள
     நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன்
          நிலைஅறிந்தும் அருளஇன்னும் நினைந்தி லாயே.

உரை:

     கலை வகைகள் பலவும் நிறைந்த கடல் போன்றவனே, கருணையே யுருவாய நீண்ட கடல் ஒப்பவனே, காட்டில் நடந்தே சென்ற பெரிய கடலே, என்னுடைய கருத்தாயவனே, ஞானமாகிய மலையின்கண் தோன்றும் சூரியனே, வானத்திலே தோன்றுகின்ற சூரியனே, அன்பருடைய மனத்தின்கண் விளங்குகின்ற சுயஞ்சுடரே, மணியே, விண்ணவர் தலையிற் சூடும் முடிமணி போல்பவனே, வாய்மை யுருக்கொண்ட தசரத மன்னனுடைய சூரிய குலத்துக்கு மணியாகத் தோன்றியவனே, தனியனாகிய என் மனத்திடத்தே எழுந்தருளுகிற சீராமனாகிய வள்ளலே, என் மனநிலையை அறிந்தும் திருவருள் புரிய நினைக்கின்றாயில்லையே, என் செய்வேன். எ.று.

     எல்லாக் கலைகளையும் கற்றுணர்ந்தவன் என்பார் “கலைக் கடலே” எனவும், அளப்பரிய கருணையாளனாதலின் “கருணை நெடுங்கடலே” எனவும் இயம்புகின்றார். தாய் தந்தையாரின் ஆணை யேற்றுக் காடுகளில் நடந்து திரிந்தும் மாறாக் குணஞ் செயல்களை யுடையனாதல் கண்டு, “கானம் கனந்த தடங்கடலே” என வுரைக்கின்றார். “தடவும் கயவும் நளியும் பெருமை” குறிப்பன என்பது தொல்காப்பியம்; தட கடல் என்பது தடங்கடல் என வந்தது. கருதுவார் கருத்தறிந்து உதவுவதால், “என் கருத்தே” என்று போற்றுகின்றார். உதயகிரியில் தோன்றும் சூரியன் போல ஞானசூரியனாய்த் திகழ்வது தோன்ற, “ஞானமலைக்க ணெழுஞ் சுடரே” எனவும்,. சூரியகுலத் தோன்றலாதலால் “வான் சுடரே” எனவும் இசைக்கின்றார். அன்பால் நினைப்பவர் மனத்தில் தோன்றும் இயல்பு பற்றி, “அன்பர் மனத்தொளிரும் சுயஞ்சுடரே” என்று மொழிகின்றார். சுயஞ்சுடர் - பிறிதின் சார்பின்றித் தானே தனித் தொளிரும் சுடர். மணி - ஈண்டு நீலமணி மேற்று. வாய்மை யறத்தைக் காத்தற்கே வாழ்ந்தவன் தசரதன் எனச் சான்றோர் கூறுதலால், “வாய்மைத் தசரதன்தன் குலமணியே” எனப் புகல்கின்றார். “வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்” (வாலி) என்று கம்பரும் பாராட்டுவது காண்க. மக்களினும் வானோர் உயர்ந்தவராகலின், அவர்களால் முடி சாய்த்து வணங்கப்படும் பெருமை நோக்கி, “வானோர் தலைக்கண் உறு மகுட சிகாமணி” என்று வழுத்துகிறார். மாணிக்க வாசகரும், “அண்ணா மலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை” (திருவெம்) என்று குறிப்பிடுவார். உள்ளுவார் உள்ளத்தின் கண் உறைபவன் சீராமபிரான் என்பவாகலின், “தமியேன் உள்ள நிலைக் கண் உறும் சீராம வள்ளல்” என்று சிறப்பிக்கின்றார். திருவருள் பெறாமல் சோர்வுறும் தமது மனநிலையை நன்கறிந்தும் அருளாமைக்கு வருந்துதல் விளங்க, “என் நிலை யறிந்தும் அருள இன்னும் நினைந்திலாயே” என இயம்புகின்றார்.

     இதுவும் முன்னது போலத் திருவருள் பெறாமைக்கு வருந்தியதாம்.

     (2)