பக்கம் எண் :

1944.

     பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம்
          போக்குகின்றேன் இவ்வுலகப் புணர்ப்பை வேண்டி
     என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ
          என்செய்கேன் என்செய்கேன் ஏழை யேன்தான்
     பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன்
          பேரருளும் உடையேனோ பிறந்தேன் வாளா
     உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன்
          ஒருமுதல்வா ஸ்ரீராமா உணர்கி லேனே.

உரை:

     உலகத் தொடர்பாகிய வாழ்வு வேண்டிப் பொருளுடைய செல்வர் மனைகட்குச் சென்று வீணாகக் காலத்தைக் கழிக்கின்றேன்; அதனால் யான் என்னை யுடையவனாகிய உன்னுடைய திருவடிப் பேற்றை மறந்தேன்; ஐயா, இனி நான் என்ன செய்வேன்; அறிவில்லாத ஏழையாய் விட்டேன்; யாவர்க்கும் பிற்பட்டேன்; பிழை செய்துள்ளேனே யன்றி உனது பேரருளைப் பெற்றுள்ளேனா? வீணாகப் பிறந்தேன்; உனது மனத்தின்கண் என்ன நினைக்கின்றாயோ? ஒப்பற்ற முதல்வனே, சீராமா, ஒன்றும் உணர மாட்டாதவனாயினேன். எ.று.

     உலகப் புணர்ப்பு - உலகியல் வாழ்க்கைத் தொடர்பு. பிறந்தவர் வாழ்ந்தே தீர வேண்டி உலகவாழ்விற் பிணிப்புறுகின்றார்களாதலால், “உலகப் புணர்ப்பு வேண்டி” என வுரைக்கின்றார். உலக வாழ்வு பொருள்மேல் நிற்பதால், பொருள் விழைந்து அதனை யுடையவர் மனைக்கண் பலநாள் நின்று பொழுது கழிவதை நினைந்து, “பொன்னுடையார் வாயிலிற் போய் வீணே காலம் போக்குகின்றேன்” என்றும், அதனால் கழியும் காலம் உயிர்க்கு உறுதி நல்குவதாகா தொழிதல் பற்றி “வீணே காலம் போக்குகின்றேன்” என்றும் இயம்புகின்றார். பொன்னென்றது, பொன்னும் பொருளுமாகிய செல்வப் பொருளை. உடல், பொருள், உயிர் மூன்றும் சீராம பிரானுக்கே உரிய வாதலை யுணர்ந்துரைத்தலால், “என்னை யுடையாய்” என்று கூறுகிறார். உறுதி யென அடைதற்குரியது திருவடியாதலால், அதனை நினையா தொழிந்தமைக்கு வருந்துதலின், “நின்னடியை மறந்தேன் அந்தோ” என்கின்றார். வருத்தம் மீதூருங்கால், அறிவும் செயலும் ஒடுங்குவது புலப்பட, “என்செய்கேன் என்செய்கேன்” என அடுக்குகிறார். அறிவிழந்தமை பற்றி, “ஏழையேன் நான்” என அவலிக்கின்றார். யாவர்க்கும் இதனால் பிற்பட்டதாகக் கருதுமாறு விளங்கப் “பின்னுடையேன்” என வருந்துகிறார். தான் அருட்பேறு எய்தாமைக் கேது பிழை பல செய்துள்ளமை என வுணர்ந்துரைப்பாராய், “பிழையுடையே னல்லால் பேரருளும் உடையேனோ” எனவும் உரைக்கின்றார். அந்நிலையில், யான் இவ்வாறு வருந்தா நிற்க, நீ என்னைப் பற்றி யாது நினைந்தருளுகிறாயோ, எனக்குத் தெரியவில்லை என முறையிடலுற்று, “உன்னுடைய திருவுளத்தில் என் நினைதியோ உணர்கிலேன்” என மொழிகின்றார். ஒரு முதல்வன் - ஒப்பற்ற தனி முதல்வன்.

     இதனால் திருவருள் பெறாத பிறப்பை நினைந்து வருந்தியவாறாம்.

     (6)