பக்கம் எண் :

1945.

     அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன்
          ஆருயிருக் கொருதுணையே அரசே பூவை
     நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே
          நெடுங்கடலுக் கணையளித்த நிலையே வெய்ய
     மறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோர்
          வாளினாற் பணிகொண்ட மணியே வாய்மைத்
     திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின்
          திருவருளே அன்றிமற்றோர் செயலி லேனே.

உரை:

     அறமாகிய கனியைப் பழுத்தளிக்கும் மரம் போல்பவனே, என்னுடைய குருவே, எனது அரிய உயிர்க்குத் துணையானவனே, அயோத்தி அரசனே, காயாம் பூவின் நிறம் சிறக்க அழகொழுகும் வடிவத்தையுடைய குன்று போல்பவனே, நெடிய கடலுக்கு அணையிட்ட உயர்நிலைப் பெருமானே, கொடிய பாவத்தைச் செய்யும் இலங்கை வாழும் இராவணனை முன்பொருகால் வாட்போர் செய்து பணிவித்து மாய்த்த நீலமணி யொப்பவனே, வாய்மை யறத்தின் கூறுகளனைத்தையும் கொண்ட சீராம வள்ளலே, உன்னுடைய திருவருளைப் பெறுவதன்றி வேறு செயல் ஒன்றும் எனக்கு இல்லை. எ.று.

     பழம் பழுக்கும் இயல்பு தருவுக்குண்டாதலால் இராம்பிரானாகிய மரம் அறமாகிய கனியைப் பழுத்து உயிர்கட்கு நல்குவது என்றற்கு “அறம் பழுக்கும் தருவே” எனப் போற்றுகின்றார். திருவருள் ஞானம் தருதலால் “என் குருவே” என்றும், உயிர்க் குறுதியான வீடு பேறளிப்பது பற்றி “ஆருயிருக்கு ஒரு துணையே” என்றும் உரைக்கின்றார். அயோத்தி நகர் அரசனாதலின், “அரசே” எனக் கூறுகின்றார். அருவி நீர் ஒழுகும் கற்குன்று போலாது அழகொழுகும் அழகுக் குன்றாதல் விளங்க, “அழகொழுகும் வடிவக் குன்று” எனப் புகழ்கின்றார். நிலையாமல் பேரலை கொண்டலைக்கும் நெடுங்கடற்கு அணையிடும் திறம் நிலையாய தலைவர்க்கன்றி யாகாமை நோக்கி, “நெடுங்கடலுக் கணையளித்த நிலையே” எனக் கூறுகிறார். கொடும் பாவியாதலால் இராவணனை “வெய்ய மறம் பழுக்கும் இலங்கை யிராவணன்” எனப் பழிக்கின்றார். மணி - நீலமணி. வாய்மை காக்க முற்பட்டு உயிர் துறந்த தசரதன் மகனாதலால், வாய்மைக் கூறுகள் அனைத்தையும் உயிர் கெடாது நின்று காத்த நலம் புலப்பட, “வாய்மைத் திறம்பழுக்கும் சீராம வள்ளலே” எனச் சிறப்பிக்கின்றார். வாய்மைத் திறம் என்றற்கு, வாய்மை முதலாய அறத் திறம் பலவும் எனினும் அமையும்.

     இதனால், வாய்மைத் திறம் வளர்த்த இராம்பிரானது ஏற்றம் கூறி மகிழ்ந்த வாறாம்.

     (7)