1948. கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக்
குருட்டறிவோர் இடைப்படும்என் குறைகள் எல்லாம்
ஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ
அவலமெனும் கருங்கடலில் அழுந்து கின்றேன்
ஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய்
ஏற்றுகின்றோர் நின்னைஅன்றி இல்லேன் என்னைச்
சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன்
திருவுளத்தைத் தெரியேனே சிறிய னேனே.
உரை: சிறப்பாகச் சொல்லுதற் கேற்ற பண்பில்லாத செல்வமும் குருட்டறிவு முடையவர் கூட்டத்தில் கிடக்கும் என்னுடைய குறைகள் பலவற்றையும் தீர்த்துக் கொள்வதற்கு வழியொன்றும் அறிகிலேன்; ஐயோ, துன்பமென்னும் ஆழ்ந்த கடலில் வீழ்ந்து மூழ்குகின்றேன்; அதினினின்றும் நீங்கிக் கரை யேறுதற்கும் வழிவகை தெரியவில்லை; எந்தையே, என்னைக் கரை யேற்றுபவர் உன்னை யன்றி வேறே ஒருவரும் எனக்கில்லை; என்னை வெறுப்பதோ என்பால் இரங்கி விரும்புவதோ யாதோ? உன் திருவுள்ளத்தைச் சிறுமையுடைய யான் தெரியேன் எ.று.
தீமை செய்தற்கும் வறுமை யுறுவித்தற்கும் ஏறுவாகும் செல்வத்தைக் “கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வம்” எனவும், நல்லது தேர்ந்து நலம் காணமாட்டாத அறிவைக் “குருட்டறிவு” எனவும் விளக்குகின்றார். இவ்விரண்டு முடையார் கூட்டம் குறையானவற்றையே செய்து துன்ப மெய்துவிக்குமாகலின், “செல்வக் குருட்டறிவோர் இடைப்படும் என் குறைகளெல்லாம் ஆறுவதோர் வழி காணேன்” என வருந்துகிறார். அதனை நினைக்கும்போது நெஞ்சம் வருந்துவது தோன்ற “அந்தோ அந்தோ” எனக் கவல்கின்றார். அதனால் அறிவு மெலிந்து அலமருதலால், “அவலமெனும் கருங்கடலில் அழுந்துகின்றேன்” எனக் கூறுகிறார். ஆழ்கடல் நிறம் கரிதாதல் பற்றிக் “கருங்கடல்” எனக் குறிக்கின்றார். அவலக் கவலையால் துன்புறாது நீங்குதற்கு வழி துறை தெரியவில்லை என்பதுணர்த்த, கடலில் அழுந்துகின்றேன் என்றதற்கேற்ப, “ஏறுவதோர் வகை யறியேன்” என இயம்புகின்றார். நீ யருள் கூர்ந்து கரையேற்றினாலன்றித் தானாக ஏற மாட்டாத சிறுமையடைந்துள்ளேன் என்பாராய், “ஏற்றுகின்றோர் நின்னையன்றி இல்லேன்” என முறையிடுகின்றார். குருட்டறிவினரோடு இருந்தமை பற்றி, என்னை வெகுண்டு கடிவதோ, எனது சிறுமை நோக்கி இரங்குவதோ நீ எதனைச் செய்ய எண்ணுகின்றாயோ ஒன்றும் எனக்குத் தெரியாது எனக் கூறுபவர், “என்னைச் சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் திருவுளத்தைத் தெரியேனே சிறியனேனே” என்று செப்புகின்றார்.
இதனாற் குறைகளை யெடுத்தோதி இனிக் கொள்ளுவதோ தள்ளுவதோ ஒன்றைச் செய்வது நின் திருவுள்ளம் என முடித்தவாறாம். (10)
|