பக்கம் எண் :

102. வீரராகவர் போற்றிப் பஞ்சகம்

திருஎவ்வுளுர்

    அஃதாவது வீரராகவப் பெருமானைப் போற்றிப் பரவும் பாட்டுக்கள் ஐந்து கொண்ட சொன்மாலை என்பதாம். திருஎவ்வுளூரிற் கோயில் கொண்டிருக்கும் திருமாலை வீரராகவப் பெருமாள் என்பர். சான்றோர் “எவ்வுள் கிடந்தான்” எனச் சிறப்பிப்பர். திருவெவ்வுளூர், திருவள்ளூர் என இந்நாளில் மருவி வழங்குகிறது. இப்பாட்டுக்கள் ஐந்தும் வீரராகவப் பெருமானை அருச்சிப்பதற்கு ஏற்றவை. கிடந்த கோலத்தில் இருக்கும் இப்பெருமானுக்கு, வீரராகவன் என்ற பெயர் வந்த வரலாறு தெரியவில்லை.

அறுசீர்க கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1949.

     தண்ணமர் மதிபோல் சாந்தந்
          தழைத்தசத் துவனே போற்றி
     வண்ணமா மணியே போற்றி
          மணிவண்ணத் தேவா போற்றி
     அண்ணலே எவ்வு ளூரில்
          அமர்ந்தருள் ஆதி போற்றி
     விண்ணவர் முதல்வா போற்றி.
          வீரரா கவனே போற்றி.

உரை:

     குளிர்ச்சி பொருந்திய சந்திரனைப் போல் சாந்தப் பண்பே மிக்குத் தோன்றும் தத்துவனே, போற்றி; அழகிய நீல நிறமுடைய பெரிய மணியே, போற்றி; நீலமணியும் ஒளியும் வண்ணமும் உடைய தேவ தேவனே, போற்றி; தலைவனே, திருவெவ்வுளூரில் விரும்பி யுறையும் ஆதியே, போற்றி; தேவர்கட்கு முதல்வனே போற்றி; வீரராகவனே போற்றி. எ.று.

     தண்ணிய மதி யுவமம், சாந்தப் பண்பின் நலம் புலப்படுத்தற்கு. வீரராகவப் பெருமான் முகத்தில் சாந்தம் நிலைபெறுதலை இன்றும் காணலாம். தத்துவன் - தத்துவங்களை இயக்கி யாள்பவன். வண்ணம் - அழகு. மாமணி - நீலமணி. மணி வண்ணத் தேவன், நீலமணியின் நிறமும் ஒளியும் உடைய தேவதேவனாதலால், “மணிவண்ணத் தேவே” என்று போற்றுகிறார். அண்ணல் - தலைவன். தேவர்கட்குத் தலைமைத் தேவராதலால் “விண்ணவர் முதல்வா” எனத் துதிக்கின்றார். வீரராகவன் - இராமபிரான்; ரகு குலத்திற் றோன்றியதனால் இராமன் இராகவன் எனப்படுகிறான்.

     (1)