1950. பாண்டவர் தூத னாகப்
பலித்தருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம்
நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில் லாமல் ஓங்குஞ்
ஜோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வு ளூர்வாழ்
வீரரா கவனே போற்றி.
உரை: பாண்டவர்க்குத் தூதனாகச் சென்று அருள் புரிந்த பரமனே, போற்றி; விசுவ வுருக் கொண்டவன் என்று வேதங்கள் ஓத விளங்கும் பெரிய செல்வமே போற்றி; தூண்டப்படுதலின்றி உயர்ந்தொளிரும் விளக்கே, போற்றி; வேண்டுகின்ற அன்பர்கள் இருக்கும் திருவெவ்வுளூர் வீரராகவனே, போற்றி. எ.று
பாண்டவர் - பாண்டு மன்னன் புதல்வர். பாலித்து என்பது பலித்து எனக் குறுகிற்று; பாலித்தல் - செய்தல்; காத்தலுமாம். நீண்டவன் - திருவிக்கிரமன்; விசுவவுருவன் என்றுமாம். பேரருட் செல்வனாதலின், “மாநிதி” என்கின்றார். தூண்டா விளக்கு, “தூண்ட லில்லாமல் ஓங்கும் சோதி” எனப்படுகிறது. இதனைக் கோயிற் கல்வெட்டுக்கள் திருநுந்தா விளக்கெனக் குறிக்கின்றன. வேண்டவர் - வேண்டுதல் செய்கின்ற அன்பர்கள்; பத்தர்கள் எனினும் பொருந்தும். (2)
|