பக்கம் எண் :

1951.

     மேதினி புரக்கும் வேந்தர்
          வீறெலாம் நினதே போற்றி
     கோதிலா மனத்தே நின்று
          குலாவிய கோவே போற்றி
     ஓதிய எவ்வு ளூரில்
          உறைந்தருள் புரிவாய் போற்றி
     வேதியன் தன்னை ஈன்ற
          வீரரா கவனே போற்றி.

உரை:

     உலகினை ஆள்கின்ற மன்னர்களின் சிறப்பெல்லாம் நின்னுடையதாகக் கொண்டவனே போற்றி; குற்றமில்லாத மனத்தின்கண் நின்று திகழும் தலைவனே போற்றி; நூல்கள் சிறப்பித்தோதும் திருஎவ்வுளூரில் எழுந்தருளி அருள் செய்பவனே போற்றி; வேத மோதும் பிரமனைப் பெற்ற வீரராகவனே போற்றி. எ.று.

      மேதினி - நிலவுலகம். வீறு -தனிச்சிறப்பு. திருமாலின் கூறாதல் பற்றி வேந்தர் சிறப்பெல்லாம் திருமாலுக்குரிய தென்பர். அதனால், “மேதினிபுரக்கும் வேந்தர் வீறெல்லாம் நினதே” என்று கூறுகிறார். “திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்” (திருவாய். 4, 8) என்று நம்மாழ்வார் உரைப்பது காண்க. கோது - குற்றம். மெய்யன்பரது தூய மனத்தின்கண் உறைகின்றா னெனச் சான்றோர் கூறுதலின், “கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே” என வுரைக்கின்கின்றார். ஆழ்வார்கள் விருப்புடன் புகழ்வதால், “ஓதிய வெவ்வுள்” என்று உயர்த் துரைக்கின்றார். “எண்ணில் நீலமார் வண்டுண்டு வாழும் நெய்தலந் தண்கழனி, ஏல நாறும் பைம்புறவில் எவ்வுள் கிடந்தானே” (பெரிய. 2 : 25) எனத் திருமங்கை மன்னன் ஓதுவது காண்க. வேதியன் - பிரமன்; எப்போதும் வேதங்களை யோதுவதால் பிரமன் “வேதியன்” எனப்படுகின்றான்.

     (3)