பக்கம் எண் :

1953.

     அற்புதத் திருவை மார்பில்
          அணைத்தபே ரழகா போற்றி
     பொற்புறு திகிரி சங்கு
          பொருந்துகைப் புனிதா போற்றி
     வற்புறு பிணிதீர்த் தென்னை
          மகிழ்வித்த வரதா போற்றி
     வெற்புயர் எவ்வு ளூர்வாழ்
          வீரராக கவனே போற்றி!

உரை:

     அற்புத வடிவையுடைய திருமகளை மார்பிடத்தே கொண்ட மிக்க அழகை யுடையவனே, போற்றி; பொன்னிறங் கொண்ட சக்கரத்தையும் வெண்மையான சங்கையும் ஏந்துகின்ற கைகளை யுடைய புனிதனே, போற்றி; வலிதா யுற்ற நோய் தீர்த்து என்னை இன்புற வைத்த வரதனே, போற்றி; மலை போலுயர்ந்த திருவெவ்வுளூரில் எழுந்தருளுகின்ற வீரராகவப் பெருமானே, போற்றி. எ.று.

     திருமகளின் உருநலத்தைச் சிறப்பிப்பதற்கு, “அற்புதத் திரு” எனக் குறிக்கின்றார். திருமகளை மார்பில் வைத்துக் கொண்ட போதும் அழகு பெருக நின்றமையால், “திருவை மார்பில் அணைத்த பேரழகா” என்று போற்றுகின்றார். “வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு” எனப் பெரியாழ்வாரும் பேசுகின்றார். பொற்பு, ஈண்டுப் பொன்மை நிறத்தின் மேற்று. திகிரி - சக்கரம். புனிதன் - தூயவன். நோய் நீங்குமிடத்து இன்ப மெய்துதல் இயல்பாதலின், மருந்து மந்திரங்களால் தீராத நோய் என்றற்கு, “வற்புறு பிணி” என்கின்றார். நோய் நீங்குமிடத்து இன்பம் எய்துதல் இயல்பாதலின், பிணி தீர்த்து மகிழ்வித்த வரதா” என்றுரைக்கின்றார். வரதன் - வரந் தருபவன். எவ்வுளூரின் இயற்கைப் பெருமையைக் குறித்தற்கு, “வெற்புயர் எவ்வுளூர்” என விளம்புகின்றார்; உயர்வு தெரிவித்தற்கு, வெற்புக் கூறப்பட்டது. “மல்லல் மலையனைய மாதவத்தீர்” (சீவக. 2 7 8 9) என வருதல் காண்க.

     (5)