பக்கம் எண் :

103. இரேணுகை தோத்திரம்

சென்னை ஏழுகிணறு

    அஃதாவது, இரேணுகை யென்னும் அம்பிகையைத் துதிக்கும் சொன்மாலையாம். இதன்கண் ஐந்து பாட்டுக்களேயுள்ளன. இந்த அம்பிகையின் கோயில் சென்னையில் ஏழுகிணறு என்னுமிடத்தில் உளது. இரேணுகை என்பவள் சமதக்கினி என்ற முனிவரின் கற்புடை மனைவி; பரசுராமனைப் பெற்ற தாய். தந்தையின் கட்டளைப்படி பரசுராமனால் தலையறுக்கப்பட்டுப் பின்னர் அவனால் தெய்வமானவள். தொழுதார்க்கு வரங்கொடுக்கும் சிறப்பால் தென்னாட்டில் பல இடங்களில் கோயில் கொண்டு விளங்குகின்றாள். ஐரோப்பியர் ஆட்சிக்கு முன்னே, துலுக்கராட்சி நிலவியபோது, அவர்கள் தந்த பொன்னைக் கொண்டு இக்கோயில் அமைக்கப்பட்டதாகலின், இத்தேவிக்குத் துலுக்காணத்தம்மை யென்று பெயர் வழங்குவதாயிற்று. துலு - துலுக்கர்; காணம் - பொன்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

1954.

     சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச்
          செல்வம் கல்வியுமும் பொறையும்
     பார்வளர் திறனும் பயன்வளர் பரிசும்
          பத்தியும் எனக்கருள் பரிந்தே
     வார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய்
          மணிவளர் அணிமலர் முகத்தாய்
     ஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத்
          திரேணுகை எனும்ஒரு திருவே.

உரை:

     கச்சணிந்த கொங்கைகளையும், மணம் மிகும் கூந்தலையும், நீலமணி போன்ற நிறத்தையும், அழகிய மலர் போன்ற முகத்தையும் உடையவளே, பெருமையான குணத்தையுடைய அம்மையே, புகழையுடைய துலுக்காணத்து இரேணுகை யென்னும் ஒப்பற்ற தெய்வமே, சீர் வளர்க்கும் அறிவும், செல்வமிகும் வாழ்வும், கல்வியும், பொறுமையும், உலகில் இனிது வாழும் திறமும், யார்க்கும் பயன்படும் தன்மையும், பக்தியும் பரிவுடன் எனக்கு அருள்வாயாக. எ.று.

     வார் - மகளிர் மார்பிலணியும் கச்சு. மரு - நறுமணம். இரேணுகை நீல நிறத் திருமேனி யுடையவளாகையால் “மணிவளர் அணிமலர் முகத்தாய்” என்று புகழ்கின்றார். மணி - நீலமணி. அணிமலர் - அழகிய தாமரைப் பூ. ஏர் - பெருமை. நற்குண நற்செயல்களால் பெருமை யுண்டாவதாதலால் “ஏர்வளர் குணத்தாய்” என்று கூறுகின்றார். இசை - புகழ். இரேணுகைக்குக் கோயிலமைதற்கு வேண்டும் பொன்னும் பொருளும் துலுக்கரசு கொடுத்தமையின், “துலுக்காணத்தம்மை யெனும் திருவே” என்று போற்றுகின்றார். துலுக்கர் காணம், துலுக்காணம் என வந்தது. திரு : ஈண்டு அழகுக்கும் செல்வத்துக்கு தெய்வமாக விளங்குபவள் எனப்பொருள்படும். சீர் - ஒழுக்கத்தால் உளதாகும் புகழ். மதி - அறிவு. அறிவும் ஒழுக்கமுமே ஒருவர்க்கு விழுப்பம் தருவனவாதலால், “சீர்வளர் மதி நல்குக” என வேண்டுகின்றார். உலகில் வாழும் வாழ்க்கை இனிது இயலுவதற்குக் கண்டார் மதிக்கும் அழகுன்றியமையாத்தாதலாலும், அதனால் செல்வம் மிகுவதாலும் இரண்டையும் கூட்டித் “திருவளர் வாழ்க்கைச் செல்வம்” என்று சிறப்பிக்கின்றார். பொறுமை, பொறை எனப்படுகிறது. வாழ்க்கையில் தோன்றும் துன்பங்களைப் பொறுத்தாலன்றி வாழ்வு வளமடையா தென்பதுபற்றிக் கல்வியோடு பொறுமைப் பண்பும் அமைய வேண்டும் என்றற்குப் “பொறை” வேண்டுகிறார். பார் வளர் திறம் - உலகில் தனக்கும் பிறர்க்கும் பயன்படவாழும் திறம்; அது இனிதாதல்பற்றிப் “பார் வளர் திறம்” என்றும், பயனில செய்தலும் சொல்லுதலும் குற்றமாதலால், அஃது உண்டாகாத நன்னெறியை, “பயன் வளர் பரிசு” என்றும் பகர்கின்றார். இதுகாறும் இம்மைக் குரியனவே கூறினாராகலின், உயிர் வாழ்வு உலக வாழ்வோடு நின்றொழிவ தன்மைபற்றி, அம்மை வாழவுக்குறுதி நல்கும் பக்தி வேண்டுமென்பாராய், “பக்தியும் எனக்குப் பரிந்து அருளுக” எனத் துதிக்கின்றாள்.

     இதனால், இம்மைக்கும் அம்மைக்கும் உறுதி நல்கும் நற்பண்புகளை வழங்குக என வேண்டியவாறாம்.

     (1)