பக்கம் எண் :

1955.

     உவந்தொரு காசும் உதவிடாக் கொடிய
          உலுத்தர்தம் கடைதொறும் ஓடி
     அவந்தனில் அலையா வகைஎனக் குன்தன்
          அகமமலர்ந் தருளுதல் வேண்டும்
     நவந்தரு மதிய நிவந்தபூங் கொடியே
          நலந்தரு நசைமணிக் கோவை
     இவந்தொளிர் பசுந்தோள் இசைதுலுக் காணத்
          திரேணுகை எனும்ஒரு திருவே.

உரை:

     புதுமையாக உயர்ந்த மதி பூத்த மலர்க்கொடி போன்றவளே, நன்மை தரும் விரும்பத்தக்க மணிமாலை கிடந்து விளங்கும் பசுமையான தோள்களையுடைய துலுக்காணத்து இரேணுகை யெனும் ஒப்பற்ற திருவருட் செல்வமே, இரப்பவர்க்கு மனமகிழ்ந்து ஒரு காசும் ஈயாத கொடிய உலுத்தருடைய வீடு தோறும் சென்று, வீணே அலையாதவாறு, உனது திருவுளம் கனிந்து அருள் செய்தல் வேண்டும். எ.று.

      முழுமதியை மலராகப் பூக்கும் கொடி யுளதாயின் அது புதுமையாதலால், “நவந்தரு மதியம் நிவந்த பூங்கொடியே” என்று நவில்கின்றார். சேக்கிழாரும், “புயல் சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக் கொடியோ” (தடுத்) எனவுரைப்பது காண்க. நிவத்தல் - உயர்தல். கண்டார் விரும்பும் பொலிவு கொண்ட மணிமாலை என்றற்கு “நசைமணிக் கோவை” எனக் கூறுகின்றார். கோவை - மாலை. இவந்தொளிர் தோள் - கிடந்து விளங்கும் தோள். இவர்ந் தெனற்பாலது எதுகை நோக்கி இவந்து என வந்தது. இவர்ந்தெனப் பாடம் கொள்ளினும் பொருந்தும். பச்சை நிற மேனியளாதலால், “பசுந்தோள்” எனப் புகல்கின்றார். அச்சத்தாலும் அதிகார முடையரென்பதாலும் கொடுப்பதன்றி, மனமுவந்து கொடாத செல்வரை, “உவந்து ஒருகாசும் உதவிடா உலுத்தர்” என வுரைக்கின்றார். இயல்பாகவே கொடுமை செய்யும் பண்பினர் என்பார், “கொடிய வுலுத்தர்” எனக் கூறுகின்றார். உலுத்தர் - உலோபிகள். உள்ளீடு வலி குன்றிய மரம் போன்றவரை உலுத்தர் என்பது வழக்கு, கடை - மனைவாயில். அவம் - வீண்; பயனின்மை. இரப்பார்க்கு இனிது உதவும் இயல்பமைந்த செல்வம் வேண்டுமெனக் கேட்கின்றமை தோன்ற, “அருளுதல் வேண்டும்” என்கின்றார். அருளுதல், அருளை வழங்குதல் என்னும் பொருளதாம்.

     இதனால், இரப்பார்க்கு மனமுவந் தீயும் நலம் வேண்டியவாறாம்.

     (2)