1956. விருந்தினர் தம்மை உபசரித் திடவும்
விரவுறும் உறவினர் மகிழத்
திருந்திய மனத்தால் நன்றிசெய் திடவும்
சிறியனேற் கருளுதல் வேண்டும்
வருந்திவந் தடைந்தோர்க் கருள்செய்யும் கருணை
வாரியே வடிவுறு மயிலே
இருந்திசை புகழும் இசைதுலுக் காணத்
திரேணுகை எனும்ஒரு திருவே.
உரை: ஆற்றாமையால் வருந்தி வருபவர்க்கு வேண்டுவன உதவி யருளும் அருட் கடலே, அழகுற்ற மயில் போன்றவளே, பெரிய திசைகளில் வாழ்பவர் பலரும் புகழ்கின்ற துலுக்காணத்தம்மை யென்னும் இரேணுகையாகிய ஒப்பற்ற அருட் செல்வமே, விருந்தினராக வந்தவர்களை முகமலர்ந்து விரும்பிப் பேணவும், கலந்து உறவாடும் சுற்றத்தார் மனம் களிக்கும்படி செம்மையான மனத்துடன் நன்மை செய்யவும், சிறியவனாகிய எனக்கு உனது திருவருளை நல்க வேண்டும். எ.று.
வந்த துன்பத்தைப் பொறுக்க மாட்டாமல் அவதியுற்றுப் போந்து வழிபடுபவர்க்கு மன வூக்கமும் வன்மையும் பெருக வுண்டாக்கு கின்றாளாதலின், “வருந்தி வந்தடைந்தோர்க்கு அருள்செயும் கருணை வாரியே” என்று போற்றுகின்றார். கருணை வாரி - அருட் கடல். இருந்திசை - பெரிய திசைகளில் வாழும் மக்கள். பெருகி நிற்பதால் “இருந்திசை” என்கிறார். வாழ்வார்க்குச் சிறந்த அறம் விருந்தோம்பலாக, அதனைச் செய்யாமை மடமை என்று பெரியோர் கூறுவர். “உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை” (குறள்) எனத் திருவள்ளுவர் கூறுவது காண்க. “விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும்” (குறள்) எனச் சுற்றத்தின் சிறப்பை வற்புறத்துவதால், “விரவுறும் உறவினர் மகிழத் திருந்திய மனத்தால் நன்றி செய்திட சிறியனேற் கருளுதல் வேண்டும்” எனக் கேட்கின்றார். விருப்பறாச் சுற்றமாதல் வேண்டுமென அறம் கூறுவதால், வடலூர் வள்ளல் “விரைவுறும் உறவினர்” என்றும், திருந்திய மனப்பண்பு இல்லாவிடில் சுற்றத்தார் சூழாராகலின், “திருந்திய மனத்தால்” என்றும் தெரிவிக்கின்றார்.
இதனால், விருந்தோம்பல் சுற்றம் தழுவல் என்ற இரண்டு அறங்களையும் செய்தற்கேற்பத் திருவருள் புரிதல் வேண்டுமென விண்ணப்பித்தவாறாம். (3)
|