பக்கம் எண் :

1957.

     புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும்
          புத்திரர் மனைவியே முதலாய்
     நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும்
          நன்கும் எனக்கருள் புரிவாய்
     விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய்
          விளங்கருள் ஒழுகிய விழியாய்
     எண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத்
          திரேணுகை எனும்ஒரு திருவே.

உரை:

     வானத்தில் ஒளிரும் சூரியன் முதலிய ஒளிப்பொருள்கள் போல ஒளிவீசும் அணிவகைகளை யுடையவளே, விளக்கம் பொருந்திய திருவருள் ஒழுகும் கண்களை யுடையவளே, நினது நலத்தை நினைந்து பரவும் அடியார்களுக் கன்பு செயும் துலுக்காண மென்னும் இரேணுகை யாகிய திருவருட் செல்வமே நல்வினை செய்யும் தூய நன்மக்களின் துணையும் மக்கள் மனைவி முதலாகச் சேர்ந்த எனது குடும்பம் நலம் பல பெறுதற்குதவும் நன்மைகளை எனக்கு அருளுவாயாக. எ.று.

     விண்ணில் விளங்கும் சூரியன் முதலிய ஒளி செய்வனவற்றை “விண்ணிய கதிர்” என வுரைக்கின்றார்; விண்ணியல் கதிர், ஈறு குறைந்து விண்ணிய கதிரென வந்த தெனலும் பொருந்தும். நீல வானத்தில் அவை ஒளிர்வது போல இரேணுகையின் நீல மேனிக்கண் கிடந்து ஒளி செய்வதால், இழைகளை இவ்வாறு சிறப்பிக்கின்றார். அருட்பார்வையின் நலம் விளங்க, “அருள் ஒழுகிய விழியாய்” என்று கூறுகிறார். திருவுருவையும் அருள் வழங்கும் திறத்தையும் நினைந்து வழிபடுவோரை, “எண்ணிய அடியார்” என்று புகழ்கிறார். புண்ணியம் - நல்வினை. புனிதர் - மனம் தூயராகிய நல்லவர். சார்பு - துணை. அவரது துணை நல்லதே நினைத்து நலமே செய்தற்கு உதவுதலின், அதனைப் பெறற்கு அருளுக என வேண்டுகிறார். குடும்பத்தின் சிறப்புணர்த்த, “புத்திரர் மனைவியே முதலாய் நண்ணிய குடும்பம்” என்றும், குற்றமில்லாமல் உயர்தற்குச் செய்யப்படும் நற்செயல்களை, “நலம் பெறப் புரியும் நன்கு” என்றும் கூறுகின்றார்.

     இதனால் இல்வாழ்க்கை நன்கமையத் திருவருளை வேண்டியவாறாம் .

     (4)