1. திருவடிப் புகழ்ச்சி
திருவடிப் புகழ்ச்சி என்பதற்கு இறைவன் திருவடியைப் புகழ்வது என்று பொருள் கூறுவது வழக்கம்.
இறைவன் திருவடிக்குப் புகழ் இது காறும் கூறப்படாதிருப்பது போலவும், இதனால் இப்போது புகழ்
கூறப்படுவது போலவும் இப்பொருள் இசைக்கிறது. இவ்வாறு கூறாமல் இறைவன் திருவடிப் புகழை
எடுத்தியம்புவது என்று உரைப்பது நன்று என்பர் சிலர். இறைவன் புகழ் இயல்பாகவே அறிவுடைய
சான்றோர்களால் பண்டுதொட்டே பாராட்டப் படுகின்றது. உயிர்கட்கு இருவினைத் தொடர்பு
உண்டென்றும், அது நீங்குதற்கு அவன் திருவடியைப் புகழ்வதாகிய வினையே வேண்டுவது என்றும்
திருவள்ளுவர் உரைக்கின்றார். “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர்
புகழ்புரிந்தார் மாட்டு” என்ற திருக்குறள் இக் கருத்தை வலியுறுத்துகிறது. உயிரறிவை மறைத்துக்
கொண்டிருப்பது மலவிருள்; அது காரணமாகத்தான் உயிர்கள் நன்றும் தீதுமாகிய வினைகளைச் செய்து,
முறையே இன்பமும் துன்பமும் எய்துகின்றன. இறைவன் புகழை ஓதுவதாகிய வினையைச் செய்வோர்களை
அவ்வினைகள் வந்தடையா என்பது இக் குறட்பாவின் கருத்தாகும். இருள் காரணமாகத் தோன்றுவன
இருவினை என்றற்குத் திருவள்ளுவர் “இருள் சேர் இருவினை” என்பதனால், அவன் புகழ் புரிதலாகிய
வினை இருள் சேரா வாறு கடியும் திருவினை என்றல் நேரிதாம். மனத்தால் நினைப்பதும், வாயால்
ஓதுவதும், மெய்யால் தொழுது வணங்குவதும் அத்திருவினை என அறிதல் வேண்டும். இம்மூவகையும்
அடங்குதற்காகவே திருக்குறள் “புகழ் புரிதல்” எனப் புகல்கின்றது.
எங்கும் எப்பொருளிலும் கலந்து, ஒன்றாயும் வேறாயும் இருக்கும் இறைவனுக்கு, “இன்னவுரு இன்ன
நிறம்” என்று வரையறுத்துக் கூறவியலவில்லை. கூறல் வேண்டின் அவன் திருவுருக் காண்டல் வேண்டும்.
அவனை நினைந்து நினைந்து நெஞ்சம் உருகியுருகிப் பாடிய மணிவாசகர் முதலிய பெருமக்கள் “கீதங்கள்
பாடுதல் ஆடுதலல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை” எனவே உரைக்கின்றார்கள். இத்தகைய
இறைவனுக்குத் திருவடியைக் கற்பித்து அதனை புகழ்வது என்பது எங்ஙனம் இயலும் என்றொரு கேள்வி
பலருடைய உள்ளத்திலும் எழுவது வழக்கம். உயர்ந்தோர் உணர்ந்துரைத்தலால் திருவடியுண்டென்று அவனை
நினைந்து புகழ்வது நம் கடன் என்ற முறையில் அனைவரும் இறைவன் திருவடியைப் புகழ்கின்றார்கள்.
திருக்குறளில் இறைவனை நினைந்து பரவச் செய்யும் குறட்பாக்களில், அவனது தலைமையும் உண்மையும்
எடுத்துரைக்கும் ஒன்றொழிய ஏனை எல்லாக் குறப்பாக்களிலும் இறைவன் திருவடி குறித்துக்
காட்டப்படுகின்றது. இதனால், இறைவன் திருவடியை நினைந்து, புகழ்ந்து, பரவுவது அறமாம் என்றும்
அறிகின்றோம். திருவள்ளுவர் அறத்துப்பாவில் செய்குரியவற்றையே சிறப்பாகக் கொண்டு “செயற்
பாலது ஓரும் அறனே” என உரைக்கின்றார். அறங்கூறும் பகுதியாகிய அறத்துப்பாலை முதற்கண் நிறுத்தி
மொழிகின்றவர், முதல் அதிகாரத்தில் இறைவன் திருவடிப் பெருமையையே உரைக்கின்றார். இதனால்
இறைவன் திருவடியை நினைந்து, மொழிந்து, வணங்கி வாழ்வது தலையாய அறம் என உணர்கின்றோம்.
இறைவன் திருவடியை வணங்கி வாழ்தற்குரிய மக்களில் கற்றவர், கல்லாதவர் என இருதிறத்தர்
உளர். அவருள் கல்லாதவர் கற்றவர் காட்டும் வழியில் செல்பவராவர். கற்றவர் திருந்திய
சிந்தையும் மொழியும் செய்கையுமுடையாராயின், கல்லாதவர் அவர் வழி நிற்பர்; மக்கட்
சமுதாயத்தினர் நன்முறை வாழ்க்கை நடத்தி இன்புறுவர். இதனைக் கருத்திற் கொண்டே திருக்குறள்,
இறைவன் திருவடியைத் தொழாதவழி ஒருவன் கற்றவனாயினும் கல்வியால் அவனுக்குப் பயனில்லை என்று
உரைக்கின்றது. இதனால் கல்லாதவரினும் கற்றவரே இறைவனை நினைந்து அவன் திருவடியை வணங்குதற்
குரியவராவர் என்பது தெளிவாம். இதனை அவரது திருக்குறள், இறைவனது நல்ல திருவடியை தொழாராயின்,
“கற்றதனால் ஆய பயன் என்கொல்” என வுரைக்கின்றது. இதனால் கல்விப்பயன் இறைவன் திருவடியை,
நல்ல திருவடியைத் தொழுவது என்றும் அறிகின்றோம். இன்றைய கல்வி, பொருளுடையார் திருவடியைத்
தொழுது சோறும் கூறையும் பெற்று உண்டு உறங்கி வாழ்வதே பயன் எனக் குறிக்கிறது. இந்நாளில்
கற்போர் அதனையே நினைந்து வேண்டுகின்றார்கள். கல்வி கற்கும் மாணவரும் அதற்காகவே
கிளர்ச்சி அறவரம்பை அழிக்கின்றார்கள். அரசியல் கட்சிகள் அவர்களை அத்துறையில்
ஊக்குகின்றன. பொருளாளர் அரசினர் என்ற இவர்கள் திருவடியைத் தொழுவது கல்விப் பயனாக வருதல்
கூடும் என்று நினைத்தே திருவள்ளுவர், பொருளாளர் அரசினர் கால்களைப் பொல்லாத்தாள் என்று
கருதி விலக்கி, இறைவன் திருவடியையே “நல்லதாள்” எனச் செப்புகின்றார். இறைவன் திருவடியினும்
நல்லது பிறிதில்லையாதலால், அதனை நல்லதாள்
என்றல் மிகையாகும். நல்லதெனக் கூறல் வேண்டார், தீயது நல்ல தாகல் வேண்டு மெனவே விழைவர்.
திருவள்ளுவர் இங்ஙனம் கூறுவதன் கருத்து இது தான் என்று தெரிகிறது.
அரசினரும் பொருளாளரும் உலகியலுக்குரிய பொருள் வாழ்வு நல்குபவர். பொருள் வாழ்வும்
வேண்டப்படுவதே. ஆயினும் மேன் மேலும் பொருள் பெருகினாலன்றி மக்கட்குத் தொழிலும் வாழ்வும்
உண்டாக வழியில்லை. பொருட் பெருக்கத்திற்கு அறிவு இன்றியமையாது. பொருளோ இறைவன் படைத்த
ஐம்பூதக் கலப்பாகிய உலகின்கண் நிறைந்து மறைந்துளது. அதன் மறைவு நீக்கி வெளிக் கொணர்ந்து
மக்கள் வாழ்வுக்கு பயன் தரச் செய்வது அறிவு. இந்த அறிவால் உலகியற் பொருள் நுட்பங்களைக்
கண்டறிந்து தொழிலும் செல்வமும் பெருகிய நாடுகள் இந் நாளில் நாடா வளமுடைய நாடுகளாகத்
திகழ்கின்றன; நல்வாழ்வில் திளைக்கின்றன. இந்த அறிவு மக்களிடத்தேயுளது. அது மக்களின்
ஒள்ளிய கல்வியால் வெளிப்பட்டு ஒளிர்வதாகும். ஒருவர் சொல்வதைக் கேட்டும் எழுதுவதைப்
படித்தும் பெறுவது ஒருவகையறிவாயினும், பல பொருளையும் நேரிற்கண்டு, தனிநெறியிற் சிந்தித்து,
உண்மை கண்டு தெளிவது ஒள்ளிய கல்வியாம். இக்கல்வியறிவு பெறற்கு உதவுவது இறைவன் திருவருள்
அறிவு; இதனைச் சமயநூல்கள் 'திருவடி ஞானம்' என்று கூறுகின்றன. இதற்காகவே திருவள்ளுவர்,
கற்றதனால் ஆய பயன் இறைவன் நற்றாளைத் தொழுது ஒள்ளிய கல்வியறிவு பெறுவது என்று
இயம்புகின்றார்.
இந்நாளில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தோன்றியுள்ளன. அவற்றால் மக்கள் வாழ்வு, சென்ற
காலத்தில் வாழ்ந்த கூர்த்த அறிவுடைய நன்மக்கள் கனவினும் கண்டிராத, நெஞ்சினும்
நினைத்திராத வாய்ப்புக்களைப் பெற்று வளமடைந்திருக்கிறது. தெய்வமென்றும் பிறிதென்றும்
கருதியிருந்த கோள்களும் நாள்களும் மக்கள் சென்றுகண்டு திரும்புதற் குரிய நிலவுருண்டைகளாகக்
காணப்பட்டுள்ளன. துணிவுடைய மக்கள் அக் கோளுலகு சென்று வாழவும் நினைக்கின்றார்கள். நிலவுலக
நாடுகட்கிடையே அவற்றைப் பிரித்து வேறுபடுத்திய தூரமும் காலமும் வெறும் பேச்சளவாய்ச் சுருங்கி
விட்டன. பலவேறு மருந்தறிவு உடற் கூற்று உணர்வும் மக்கள் வாழ்நாளையும் பெருக்கி
நீட்டியிருக்கின்றன. இவற்றைக் கண்ட மக்கள் அறிவுக்கு, இந்த ஆற்றல், இதற்கு முன்னைய
காலத்தில் விளக்கம் பெறாத ஆற்றல், எவ்வாறு வந்தது? பொருள்களைக் கண்டறிவதோடு
தனித்திருந்து ஆழ்ந்து சிந்திக்கும் திறத்தினால் வந்தது. ஒவ்வொரு விஞ்ஞானியும் ஞானக்கண்
கொண்டு பன்னாள் சிந்தையில் கண்டு கண்டு இந்த ஆற்றலைப் பெற்றுள்ளான்; நூலறிவாலும்
பொறியறிவாளும் பெற்ற அறிவோடு சிந்தனைக் கண்ணாற் காணும் திண்மையறிவு கொண்டு இந்த
ஆற்றலைப் பெற்றிருக்கின்றனர். சிந்தனையிற் பிறக்கும் அறிவாற்றல்தான் திருவருள் அறிவு
என்பது. இதனைத்தான் சிவஞான போதம் “ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற்
சிந்தை நாடுக“ என உரைத்தது. இந்த அறிவானது இறைவனடியைச் சிந்திக்கும் செம்மைப்
பயிற்சியால் உளதாகும்.
இந்த அறிவு கைகூடப் பெற்றவர் மனக்கவலைக்கு மருந்து காண்பர்; நிலவுலகில் நீடு வாழ்வர்;
பிறவிப் பெருங்கடலை நீந்தற்குரிய ஞானமும் ஒழுக்கமும் பெறுவர் என்று திருக்குறள்
அறிவுறுத்துகிறது.
“மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்க ளாவதும்
சுந்தர மாவதும் தூநெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே” (1604)
என்று திருமூலர் கூறுகின்றார். திருஞானசம்பந்தர்,
திருந்தலார்புரம் தீயெழச் செறுவன,
விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன, பத்தியில் வருவன
மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்துமாவன மந்திரமாவன
வலஞ்சுழி யிடமாக
இருந்த நாயகன் இமயவரேத்திய
இனையடித் தலந்தானே (வலஞ்சுழி. 3)
எனத் திருவடியே பொருளாகப் பாடுகின்றார். திருநாவுக்கரசர் மிகப்பல திருப்பாட்டுக்களால்
சிவபெருமான் திருவடியைப் புகழ்கின்றார்.
“சிந்திப் பரியன சிந்திப்பவர்க்குச்
சிறந்து செந்தேன்
முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன
மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை மாயப்பன்
பாம்பு சுற்றி
அந்திப்பிறை யணிந்தாடும் ஐயாறன்
அடித்தலமே” (ஐயாறு)
இருள்தருதுன்பப் படலம் மறைப்ப
மெய்ஞ் ஞானமென்னும்
பொருள்தரு கண்ணிழந் துண்பொருள்
நாடிப் புகலிழந்த
குருடரும் தம்மைப்பரவக் கொடுநரகக்
குழிநின்
றருள்தரு கைகொடுத் தேற்றும் ஐயாறன்
அடித்தலமே.
எனவும்,
துன்பக் கடலிடைத் தோணித் தொழில்
பூண்ட தொண்டர்தம்மை
இன்பக் கரைமுகந்தேற்றும் திறத்தன
மாற்றயலே
பொன்பட்டொழுகப் பொருந்தொளி
செய்யுமப் பொய் பொருந்தா
அன்பர்க் கணியன காண்க ஐயாறன்
அடித்தலமே
எனவும்,
ஆறொன்றிய சமயங்களின் அவ்வ
வர்க்கப் பொருள்கள்
வேறொன்றி லாதன விண்ணோர்
மதிப்பன மிக்குவமன்
மாறொன்றி லாதன மண்ணொடு
விண்ணக மாய்ந்திடினும்
ஈறொன்றி லாதன இன்னம் பரரன்தன்
இணையடியே.
எனவும்,
மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்று
கீழிடந்து
மாலும் அறிந்திலன் மாலுற்றதே வழி
பாடு செய்யும்
பாலன்மிசைச் சென்று பாசம் விசிறி
மறிந்த சிந்தைக்
காலன் அறிந்தான் அறிதற் கரியான்
கழலிணையே.
எனவும் பாடிப் பாடிப் பரவியுமிருக்கின்றார்.
திருத்தாண்டகத் திருமுறையுள், இறைவன் திருவடியைச் சிறப்பித்து
ஒருகாலத் தொன்றாகி நின்றவடி
ஊழி தோறூழி யுயர்ந்தவடி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும் அடி
புகழ்வார் புகழ்தகைய வல்லஅடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும் அடி
இன்புற்றார் இட்டபூ ஏறும்அடி
திருவதிகைத் தென்கெடில நாடன் அடி
திருவீரட்டானத் தெம் செல்வன் அடி.
என்றும்,
அணியனவும் சேயனவும் அல்லாவடி
அடியார்கட் காரமுதமா யவடி
பணிபவர்க்குப் பாங்காக வல்லஅடி
பற்றற்றார் பற்றும் பவளவடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லஅடி
தணிபாடு தண்கெடில நாடன்அடி
தகைசார் வீரட்டத் தலைவன்அடி.
என்றும் பாடுகின்றார். பிறிதொரு தாண்டகத்தில்.
“பாதம் தணிப்பார் மேல்வைத்த பாதர்
பாதாளம் ஏழுருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படாவண்ணம் நின்ற பாதர்
ஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்
ஒதத் தொலிமடங்கி யூருண் டேறி
ஒத்துலக மெல்லாம் ஒடுங்கியபின்
வேதத் தொலிகொண்டு வீணைகேட்பார்
வெண்காடு மேவிய விகிர்தனாரே.”
இவ்வாறே பௌத்த நூலுள்ளும் இறைவன் திருவடியைத் தனிச் சிறப்புக் கொடுத்து,
“மாரனை வெல்லும் வீர நின்னடி
தீநெறிக் கடும்பகை கடிந்தோய் நின்னடி
பிறர்க்கறம் நுவலும் பெரியோய் நின்னடி
துறக்கம் வேண்டாத் தொல்லோஷ் நின்னடி
எண்பிறக் கொழிய இறந்தோய் நின்னடி
கண்பிறர்க் களிக்கும் கண்ணோய் நின்னடி
தீமொழிக் கடைத்த செவியோய் நின்னடி
வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி
நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி
உரகர் துயரம் ஒழிப்போய் நின்னடி
வணங்குதல் அல்லது வாழ்த்தல் என்
நாவிற் கடங்காது” (மணி. 11 : 61 - 71)
என்று பாடிப் பரவும் வழக்காறு இருந்துள்ளது.
பின் வந்த சேக்கிழார் சுவாமிகள் இறைவன், திருவடியையே பொருளாகக் கொள்ளும் ஞானம்
“திருப்பெருகு சிவஞானம்” என்றும், அது “பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானமென்றும்”
உரைக்கின்றார்.
இப்பெருமக்கள் வழங்கிய அறவுரைகளை நாத்தழும்பேறப் படித்து நன்பொருளனைத்தையும் நன்கு தெளிந்து
கைவரப் பெற்வராதலின், வள்ளலார் வேத சிவாகமங்களில் ஆங்காங்கு இலைமறை காய் போலப்
பொதிந்து கிடக்கும் அருங்கருத்துக்களைத் திரட்டித் திருவடிப் புகழ்ச்சி என்ற தலைப்பில்
பெரியதும் அரியதுமாகிய சந்த விருத்தத்தால் பாடியருளுகின்றார்.
ஏனைய திருப்பாடல்களை நோக்க, இஃது ஒரு தனி நூலாக அமைதலால் காப்புச் செய்யுளொன்று
தலைப்பில் உளது. அதன் கருத்து, திருவடிப் புகழ்ச்சியை ஓதுவார்க்கு உள்ளதில் உளதாகும்
வேட்கையைக் குறிக்கிறது.
சிவஞானத்தால் சிவத்தைத் தரிசித்தோர் சிவத்தின் திருவடியை நோக்கியிருப்பரே யன்றி வேறு
பிறவற்றை நோக்கார்; அவருடைய கருவி கரணங்கள் சிவமாய் மாறுவதால் உலகியல் நினைவும்
செயலுமற்ற நிலை அவர்கட்கு உண்டாகும். அதனைச் “சும்மா இருத்தல்” என்றும், அதன் கண்
உண்டாகும் சிவானுபவம் “சும்மா இருக்கும் சுகம்” என்றும் சொல்லப்படும். அதனை எய்துதல் வேண்டி
இத்திருவடிப் புகழ்ச்சியை ஓதுவோமாக என ஒரு வெண்பாவால் முன் மொழிகின்றார்.
நேரிசை வெண்பா
1959. இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே-துன்றுமல
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.
உரை: உரை : அனாதியே பற்றியுள்ள மலமும் வெவ்விய மாயையும் போக்கிக் கருவி கரணங்கட் கப்பாலுள்ள அக வெளியையும்
அதற்குள் இலங்கும் ஞானவெளியையும் கடந்து
சிவமே நோக்கி
அதற்குள் தோய்ந்து செயலற்றிருக்கும் சுகவாழ்வு
இன்று வருமோ? நாளைவருமோ? அன்றி என்றுதான் வருமோ? அறிகிலேன். எ.று.
ஆன்மாவுக்கு மலத்தொடர்பு என்று உண்டாயிற்றென்று உரைக்க முடியாது; அனாதித் தொடர்பு என்று சைவநூல்கள் கூறுகின்றன. அம்மலத் தொடர்பை நீக்குவது காரணமாக வந்தது உலகுடம்புகட்கு முதற் காரணமான மாயை. மலம் காரணமாக வருவது பற்றி “மலமாயை” எனப் படிகிறது. உயிரைப் பிணித்து மயக்கமும் செய்வதுபற்றி “வெம்மாயை” என விளம்புகின்றார். மாயையாலாகிய உடம்பினுள் புறக்கரணம் அகக்கரணமென வகைப்பட்டு நிற்கும் முப்பத்தொரு தத்துவங்கட்கும் அப்பாலுள்ள நிலை
அகவெளி. அவற்றிற்கு அப்பாலுள்ள சிவத்தத்துவத்துக்கு மேலுள்ள நிலை “வெளிக்குள் வெளி” யாகும். அவ்வெளியில் ஞான விளக்கம் தந்து இன்புறுவிப்பது “பரசிவம்”. அதனைத் தரிசிப்போர்க்குக் கீழே கழித்துப் போந்த கருவி கரணங்கள் இல்லாமையால்
சும்மா இருப்பதன்றிச் செயலில்லை. அந்தபரசிவபோக வாழ்வு “சும்மா இருக்கும் சுகம்”. அதனை எய்துவதற்குத்தான் திருவடி சிந்தனையும் திருவடிப் புகழ்ச்சியும் செய்யப்படுகின்றன. சிந்தனையும் புகழ்ச்சியும் சும்மா இருக்கும் சுகத்தை எப்போது தரும்? எப்போது எய்துவிக்கும்? என எழும் ஐயம் அறுத்தற்கு
“இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று என்று வருமோ அறியேன்” என உரைக்கின்றார். இந்த ஐயத்தை எழுப்புவோன் இறைவன் என்று கொண்டு
“எம் கோவே” எனக் கூறுகின்றார்.
சும்மா இருக்கும் சுகம் என்று வரினும் வருக; யான் திருவடியே சிந்தித்துப் புகழ்வேன் என்பதாம். (1)
|