பக்கம் எண் :

மூன்றாம் திருமுறை

முதல் தொகுதி

1960.  பரசிவஞ் சின்மயம் பூரணஞ் சிவபோக

           பாக்கியம் பரமநிதியம்.

 

      இறைவன் திருவடி பரம்பொருளின் கூறாதலால், அதனை முழுமுதலாகக் கொண்டு மொழிகின்றார்.

 

      பரசிவம் : மேலான சிவம் எ.று. பரம் என்ற சொல் மேல் எனப் பொருள்படும் வடசொல். கீழ் என்பது அபரம் என வரும். பரசிவம் எனவே, அபரசிவம் என என்று உண்டோ என்றற்கு இடமுன்டு. பரம் பொருளை நம்முடைய சமயநூல்கள் இரண்டு வகையாக உரைக்கும். இன்ன நிறம், இன்ன உரு என்று அறியமாட்டாத நிலையில், எல்லாமாய் அல்லதுமாய் இருப்பது ஒரு நிலை; அது ஆகமங்களும், வேதாந்தமென்ற உபநிடதங்களும் கூறும் நிலை; பொதுவாக அதனைத் தத்துவச் சமயநிலை என்பர். புராணங்களும் இதிகாசங்களும் எளிய மக்கள் இனிதறிந்து வழிபட்டு உய்திபெறற் பொருட்டுக் கூறும் நிலை; ஒரு நாமமும் ஓருருவும் இல்லாத பரம்பொருட்கு ஆயிரம் உருவும் பெயரும் கூறவுள்ள நிலையாம். இதனைப் பௌராணிக சமயம் என்பர். சிவன் கோயில்களில் கருநிலை (மூலத்தானம்) ஒன்று தான் தத்துவ சமயம். பிறவிடங்களில் உருவும் பெயரும் கொண்டு நிறுத்தப் பட்டிருக்கும் தெய்வங்கள் அனைத்தும் பௌராணிக சமயம். இத் தெய்வங்களில் சடைமுடியும், நெற்றிக் கண்ணும், எண்தோளும் அகன்மார்பும், இருகாலும் கொண்ட சிவ்வடிவும், இவ்வாறே திருமாலும் பிரமனும் உமாதேவியும் திருமகளும் கலைமகளும் ஆகியன பௌராணிகத் தெய்வங்களாகும். இவை யாவும் உருவில் பரம்பொருட்கு உருவாய் அமைந்தவை; அதனால் இத்தெய்வங்களில் ஒன்றாகிய சிவம் அபரசிவம்; அதுபற்றியே, எல்லா வுலகுகட்கும் முதற்பொருளாய் வேதாந்தம், ஆகமாந்தம் என்ற மேலான நூல்களால் குறிக்கப்படுவது பரசிவம் என்பதாயிற்று.

 

      சின்மயம்: அறிவுருவானது எ.று. சித் மயம், சின்மயம் என வந்தது. சித் முத்திரை, சின்முத்திரை; சத் மார்க்கம் சன்மார்க்கம் எனவருவது போலச் சித் மயம் சின்மயம் என வந்துளது. சித்து என்ற சொல் அறிவைக் குறிப்பது. பரம் சிவம் எனக் கூறப்பட்ட பொருள் கேட்போர் உரைப்போர் என்ற இருதிறத்தாரிடத்தும் எங்ஙனம் உளது என்பது விளங்கச் “சின்மயம்” எனக் கூறுகின்றார். சிவம், ஞானவடிவினது என்பது.

 

      பரசிவம் எனப் புகழப்படும் பரம்பொருள், ஞானமே உருவானது என்பதாம். உலகியல் ஞானத்தை நோக்கும்போது சிலரிடத்துக்குறைந்தும், சிலரிடத்து மிகுந்தும் காணப்படுதலின், சிவபரம்பொருள் ஞான நிலையில் குறைவு நிறைவுடையதாகுமோ என ஐயுறல் கூடாது. அது ஞானமே வடிவாவதுடன் குறைவிலா நிறைவுமாம், என்றற்குப் “பூரணம்” எனப் புகல்கின்றார்.

 

      பூரணம்: நிறைந்தது. இவ்வாறே, வீராகமம் என்பது “ஆத்யந்த சூன்யம் அமலம் பரிபூர்ணம் ஏகம்” என்று அறிவிக்கின்றது.

 

      சிவபோக பாக்கியம்: சிவஞான இன்பத்தை நுகர்தற்குப் பொருளாக இருப்பது.

      சிவபோக நுகர்ச்சிக்கு மூன்று படிமுறைகளைச் சைவநூல்கள் கூறுகின்றன. அவை சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பனவாம். சிவதரிசனமாவது, செய்யப்படும் செயல்கள் அனைத்தும் தன் செயலல்ல எனவும், திருவருள் செய்விக்கச் செய்வதாகவும் தௌ¤வது. தன்னுடைய நினைவும் சொல்லும் செயலும் யாவும் திருவருள் எனஉணர்ந்து அதனிடத்தே தன்னை ஒடுக்குவது சிவயோகமாம். அந்நிலையில், “நன்றே செய்வாய், பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே” என நிற்கும் ஆன்மாவுக்கு, “நானா போகங்களையும் தானாகச் செய்து பேதமற நின்று இவனைச் சிவன் தானாக்கிவிடுவன்”; இது சிவபோகம் எனப்படும். இதனைக் கச்சியப்ப முனிவர், “அன்றும் ஆணவத்தின் அழுந்தியாங்கு அறிவாய் அறிவினுள் அழுந்தி யங்கறிவு பொன்றியும் பொன்றா தவசமாய் இன்பப் புணரிவாய் மடுப்பது போகம்” (நந்தியு. 125) என்பர். இச் சிவபோகத்தை நுகரும் செல்வநிலை சிவபோக பாக்கியம். இந்தப் பாக்கியத்தை உயிர்களாகிய நாம் பெறுதற்கு முதலாக விளங்குமாறு தோன்ற, “சிவபோக பாக்கியம்” எனத் தௌ¤விக்கின்றார்.

 

      பரமநிதியம்: மேலான செல்வம். உலகியல் உயிர்கள் பிறவுயிர்கள்பால் செய்கின்ற முதிர்ந்த அன்பு, அருளாய செல்வம் என்று சிறப்பிக்கப்படும். “அருட்செல்வம் செல்வத்துட் செல்வம்” எனத் திருவள்ளுவரும் அறிவுறுத்துகின்றார். இந்த அருட்செல்வம் இல்லார்க்குத் துறக்க வாழ்வில்லை. துறக்கத்துக்குப் பரமாவது சிவபோக வாழ்வு; அதற்குரிய திருவருளே திருமேனியாக உடையது சிவமாதலின், அதனைப் “பரம நிதியம்” எனப் பரவுகின்றார். 

(வரி-1)