மூன்றாம் திருமுறை
முதல் தொகுதி
விண்ணப்பக் கலிவெண்பா
காப்பு
நேரிசை வெண்பா
1961.
அவ்வவ் விடைவந் தகற்றி அருள்தரலால்
எவ்வெவ் விடையூறும் எய்தநிலம் - தெவ்வர்தமைக்
கன்றுமத மாமுகமுங் கண்மூன்றுங் கொண்டிருந்த
தொன்றதுநம் முள்ள முறைந்து.
உரை:
தெவ்வர் தமைக்கன்றும் - பகைவர்களை அழிக்கும்; மதமாமுகமும்கண் மூன்றும் - மதமொழுகும் யானை முகமொன்றும் கண் மூன்றும்; கொண்டு - உரையதாய்; நம் உள்ளம் உறைந்து - நமது உள்ளத்தில் எழுந்தருளி; இருந்தது ஒன்று - இருந்தது ஒரு பொருள்; அது அவ்வவ்விடை வந்து - அது அவ்வப்போதுகளில் தோன்றி; அருள் தரலால் - திருவருள் ஒளியை நல்குவதால்; எவ்வெவ்விடையூறும் எய்தல் இலம் - எத்தகைய இடையூறும் வந்து எம்மைத் தாக்குதல் இல்லேம். எ.று.
விண்ணுலகில் தேவர்கட்குப் பகைவருண்டெனப் புராணங்களும்
மண்ணுலகில் மக்கட்குப் பகைவருண்டென மண்ணக வாழ்வும் கூறுதலால்
“தெவ்வர் தமைக் கன்றும்” என உரைக்கின்றார். கன்னம் கபாலம் என்ற இரண்டிடத்தும் மதநீர் ஒழுகுதல்பற்றி “மதமாமுகமும்”
நெற்றியிற் கண்ணுடைமைபற்றிக் “கண் மூன்றும் கொண்டு” எனவும் கூறுகின்றார். உள்ளத்தைத் தாமரையாகக் கூறலால்
அது யானை முகத்தெய்வம் உறைதற்கு இடமாயிற்று. அதன்கண் அவர் எழுந்தருளுதலால் “உள்ளம் உறைந்து ஒன்று இருந்தது” என்று இயம்புகிறார். விநாயகக் கடவுள் எனப்படுவதுண்மையின்
“ஒன்று” எனல் பொருந்துவதாயிற்று. அங்ஙனம் அது இருப்பது
இடையூறு வரும்போது நீக்கி நற்றுணை செய்தற் பொருட்டு என்பாராய்
“அவ்வவ்விடை வந்து அகற்றி அருள் தரலால்” என அறிவிக்கின்றார். அஃது உறுதியாதல் தௌ¤ந்து செப்புகின்றாராதலின்
“எவ்வெவ்விடையூறும் எய்தல் இலம்” என்று எடுத்து மொழிகின்றார்.
எடுத்துக் கொண்ட செயல் இனிது முடிய விநாயகரை வழிபடுவது முறைமை; அதனாற்றான் வள்ளலார் இங்கே விநாயகரை வழிபடுகின்றார்.
சிவபரம் பொருளைச் சொன்மாலை சூட்டி வழிபடும் நெறியை மேற்கொள்ளும் சான்றோர்
சிவனை மனக்கோயிலில் வைத்து வழிபட்ட வண்ணம் இருப்பர். வழிபாடு நிகழ்ந்த வண்ணம் இருத்தலால் சொன்மாலைக்குரிய செஞ்சொற்கள் பொங்கி எழுந்த வண்ணம் இருக்கும். மனத்தே காட்சியளிக்கும் சிவம்
தான் உறையும் திருக்கோயில்களையும் நினைப்பிக்கும். அக்கோயில்களை நினைந்து அவற்றின் பெயரை எடுத்தோதிப் பரவுவதும் வழிபாடாதல் பற்றித் திருஞானசம்பந்தர் முதலிய பெரியோர்கள் «க்ஷத்திரக் கோவை
ஊர்த்தொகை எனப் பதிகம் பாடியுள்ளளர். அவர்களைப் பின்பற்றிய பெருமகனாதலின்
வடலூர் வள்ளல் இவ்விண்ணப்ப நூலில் சிவபிரான் எழுந்தருளும் திருப்பதிகளைப் பாடுகின்றார்.
|