பக்கம் எண் :

மூன்றாம் திருமுறை

முதல் தொகுதி

நூல் - கோயில்

தில்லைச் சிற்றம்பலம் பெரும்பற்றப்புலியூர்

 

1962. 

     சொற்பெறுமெய்ஞ் ஞானச் சுயஞ்சோதி யாந்தில்லைச்

     சிற்சபையில் வாழ்தலைமைத் தெய்வமே-

 

உரை :

        புகழ்பெற்ற மெய்ம்மை ஞானத்தின் இயற்கைச் சோதியாகிய தில்லையிலுள்ள சிற்சபையில் வாழ்கின்ற தலைமையான தெய்வமே. எ.று.

 

      உண்மைச் சிவஞானத்தால் புகழ்பெற்று விளங்கு தலால் “சொற்பெறும் மெய்ஞ்ஞானச் சுயம்சோதி” என விளம்புகின்றார். தில்லையில் எழுந்தருளிய இறைவடிவம் இன்னாரால் இன்ன காலத்தில் எழுந்தருளப் பெற்றதென்ற வரலாறு இன்மையின், “சுயம் சோதி” எனப்படுகிறது. தில்லையம்பதி கூத்தப்பிரானுடைய ஞானத் திருமன்று இருக்கும் இடம். அதனாற்றான் “தில்லைச் சிற்சபை” எனத் தெரிவிக்கின்றார். இது திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் காலத்தில் “திருச்சிற்றம்பலம்” என விளங்கிற்று. பின்னர் அது சிற்றம்பலமெனத் திரிந்து சிதம்பரமாயிற்று; அம்பலம் அம்பரமாயிற்று. காலவெள்ளத்தில் சிதம்பரம் சிற்சபை, சிதாகாசம் எனத் திரிந்ததன் திரிபாய் நிலவுவதாயிற்று. ஆதலாற்றான், சைவத் திருமுறைகளில் திருச்சிற்றம்பலம் என்ற திருப்பெயரே காணப்படுகிறது; பிற்கால நூல்களில் மாத்திரம் சிதம்பரம் என்ற பெயர் நிலவுகிறது என அறிதல் வேண்டும்.

 

      திருச்சிற்றம்பலத்தில் கூத்தப்பிரானாகக் காட்சியளிக்கும் சிவபரம் பொருளே சிவநெறி பரவும் தலையாய தெய்வமாதலால், அதனைச் “சிற்சபையில் வாழ் தலைமைத் தெய்வம்” எனச் சிறப்பிக்கின்றார்.

 

      திருஞானசம்பந்தர் முதலிய சிவஞானச் செல்வர்கள் தோன்றித் தமிழக முழுதும் திருவுலாப் போந்து செந்தமிழ்த் திருப்பதியங்கள் ஓதிச் சைவத்தின் தனிப்பெருமையை உலகறிந்து மகிழ்வெய்தச் செய்த அந்நாட்களுக்கு முன்பிருந்தே விளக்கம் பெற்றிருந்தவை இத்தில்லைச் சிற்றம்பல முதலிய திருக்கோயில்கள். சங்க காலத் தமிழ் வேந்தர்கட்குப் பின் களப்பிரர் முதலிய வேற்றவர் வரவால் ஒளிகுன்றிய தமிழகத்தில் வடபுலத்திலிருந்து தெலுங்கு நாடு கடந்து நெல்லூர் மாவட்டத்தின் வழியாகப் பல்லவர் என்பவர் தொண்டை நாடு புகுந்து தொண்டையர் தலைநகரமாகிய காஞ்சியம்பதியைத் தமக்கும் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தனர். அவர்கள் காலம் சைவத் திருநெறி மீளத் தலை நிமிர்ந்து ஒளி திகழ்ந்த காலமாகும்.

 

      அக்காலத்தே இத் திருச்சிற்றம்பலம் தில்லைச் சிற்றம்பலம் என்ற பெயருடன் பிறங்கிற்று.

 

     “செல்வநெடு மாடம் சென்று சேணோங்கிச்

     செல்வமதி தோயச் செல்வ முயர்கின்ற

     செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலமேய

     செல்வன் கழலேத்தும் செல்வம் செல்வமே”

 

என்று ஞானசம்பந்தர் பாடுகின்றார்.

 

      பிறிதொரு பாட்டில் தில்லையை, ஊறும் இன்தமிழால் உயர்ந்தார் உறைதில்லை” என்றும், இங்குள்ள சிற்றம்பலத்தை, “ஏறு தொல்புகழ் ஏந்து சிற்றம்பலம்” என்றும் உரைத்தருளுகின்றார்.

 

      அவர் காலத்தே அவரோடு ஒப்ப வாழ்ந்தவரும் முதியவருமான திருநாவுக்கரசர்,

 

     “சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்

     சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம்பலத்துறை

     சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்

     சிட்டர்பால் அணுகான் செறுகாலனே”

 

எனப் பரவுகின்றார். அவர் காலத்தே இத் தில்லைச் சிற்றம்பலம் பொன் வேய்ந்து பொலிவு பெற்றுப் பொன்னம்பலம் என்று புகழப்பட்டது. இதனை நாவுக்கரசர், தில்லையம்பலக் கூத்தப்பெருமானை, “செம்பொன் அம்பலத்துள் நின்ற தாணு”, “செம்பொன் அம்பலத்துள் நின்ற அத்தன்”, “தூய செம்பொன்னினால் எழுதி வேய்ந்த சிற்றம்பலக்கூத்தன்” எனப் பல பாட்டுக்களிற் குறித்துப் பாடுகின்றார்.

 

பெரும்பற்றப் புலியூர்

 

      தில்லைச் சிற்றம்பலத்தைச் சேரவுடையது பெரும்பற்றப் புலியூர். தில்லைப்பதியின் வடபகுதி பெரும்பற்று எனவும், அங்குள்ள சிவன் திருக்கோயில் புலியூர் எனவும் அந்நாளில் வழங்கினமையின், அது பெரும்பற்றப் புலியூர் எனப் பட்டது. எனினும், பெரும்பற்றப் புலியூர்க்கண் இருப்பது தில்லைச் சிற்றம்பலம் என்றே பெரியோர் குறிக்கின்றார்கள். திருச்சிற்றம்லபத்தைச் சிறப்பிக்கும் திருநாவுக்கரசர், “பெரும்பற்றப் புலியூர் எம்பிரான்” என்று புலியூர்க்கும் சிற்றம்பலத்துக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றார். திருத்தாண்டக மொன்றில், “போகமும் பொய்யாப் பொருளுமானார் புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே” என அதனையே வலுயுறுத்துகின்றார். தில்லைச் சிற்றம்பலத்தைப் பல திருப்பாட்டுகளில் பாடியவர், பெரும்பற்றப் புலியூரை, “பொது நீக்கித் தனை நினைய வல்லார்க்கு என்றும் பெருந்துணையைப் பெரும் பற்றப் புலியூரானைப் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே” எனப் பேசுகின்றார்.

 

      இவர்க்குப் பல ஆண்டுகள் கழிந்தபின் தோன்றின சுந்தரமூர்த்தி நாயனார், “கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரியகலும் கரிய பாம்பும் பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாம் அன்றே” என்று பாடிப் பரவுகின்றார்.

(1)